election2021

img

40 லட்சம் பேருக்கு வேலை; விவசாயிகளுக்கு வருமான உத்தரவாதம்.... எல்டிஎப் அறிக்கைக்கு மக்கள் வரவேற்பு....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும், பினராயி விஜயன் முதல்வர் ஆவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறும் நிலையில், இடது ஜனநாயக முன்னணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, அந்த வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்து பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

மாநிலத்திலுள்ள பொதுத்துறைகளை வலுப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு, உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி, 40 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள், விவசாயிகளுக்கு 50 சதவிகித வருமான உத்தரவாதம், வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் வரை தொழில் கடன், இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை என 50 வகையான திட்டங்களை அறிவித்துள்ளது. 900 வாக்குறுதிகளையும் அளித்துள்ளது.கொரோனா காலகட்டத்தின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக மளிகைப் பொருள்களை வழங்கத் துவங்கிய பினராயி விஜயன் அரசு, தற்போது வரை அதனை நிறுத்தவில்லை. இந்நிலையில், கேரளத்தில் மீண்டும் தங்களின் தலைமையிலான ஆட்சி அமைந்தால், ரேசன் மூலமாக விலையில்லா மளிகைப்பொருட்கள் வழங்குவது தொடரும் என்று இடது ஜனநாயக முன்னணி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல 600 ரூபாயாக இருந்த முதியோர், கைம்பெண் ஓய்வூதியத் தொகையை, 2016-21 ஆட்சிக்காலத்திலேயே 1,600 ரூபாயாக உயர்த்தி விட்டாலும், மீண்டும் இடது முன்னணி ஆட்சியமைந்தால், அதனை 2500 ரூபாயாக உயர்த்துவோம் என்று கூறியுள்ளது.கேரளத்தில் வீடின்றித் தவிக்கும் மக்களுக்கு லைப் (Life Mission) என்ற திட்டத்தை உருவாக்கி, கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 762 வீடுகளை பினராயி விஜயன் அரசு கட்டிக் கொடுத்துஉள்ளது. இலங்கையில், தோட்டத் தொழிலாளர்களாக இருந்த வம்சாவளி தமிழர்கள், 50 ஆண்டுகளுக்கு இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு வந்த 1400 குடும்பங்கள் கொல்லத்தில் குடியமர்த்தப்பட்டு இருந்த நிலையில், அவர்களுக்கும் ‘லைப்’ திட்டத்தில் பினராயி அரசு வீடு கட்டிக் கொடுத்தது. மீண்டும் ஆட்சியமையும் பட்சத்தில், ‘லைப் திட்டம்’ தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, கேரளத்தில் ஒரே ஆண்டில் ஒன்றரை லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று இடது ஜனநாயக முன்னணி வாக்குறுதி அளித்துள்ளது. பட்டியல் வகுப்பு மக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் வீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இதேபோல, மீனவர் நலனை உள்ளடக்கிய - கடலோர பிராந்திய மேம்பாட்டுக்கு ரூ. 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்; ரப்பருக்கு ஆதார விலையாக- கிலோ ஒன்றுக்கு 250 டாலர் என நிர்ணயிக்கப்படும்; கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்கெனவே சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில்  சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 10 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மலையாள மொழியும், கலைகளும் பாதுகாக்கப்படும். குடும்ப சுகாதார மையங்களில் 20 லட்சம் குடும்பங்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவசச் சிகிச்சை பெறுவதற்கு திட்டம் கொண்டுவரப்படும்; மூன்றாம் பாலினத்தவர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். சிறு குறு நிறுவனங்களின் எண்ணிக்கையை 1.4 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்து 3 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 45 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும். 

முட்டை, காய்கறி மற்றும் பால் ஆகியவற்றுக்கு வெளி மாநிலங்களை மட்டுமே நம்பியிருக்காத வகையில் தற்சார்பு அடிப்படையில் கேரளத்திலேயே அவற்றை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கும் விவசாயத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் 50 சதவிகித வருமான உத்தரவாதம் செய்யப்படும். முந்திரிப்பருப்புத் துறையில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்; பாரம்பரியத் தொழில்கள் பாதுகாக்கப்படும். கூட்டுறவுத் துறை வலுப்படுத்தப்படும்.எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களை மக்கள் தேர்ந்தெடுத்தால், 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் இடது ஜனநாயக முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.பினராயி விஜயன் அரசாங்கத்தின் கடந்த ஐந்தாண்டு சாதனைகளில் முக்கியமானது ஊழல் இல்லாத ஆட்சி மற்றும் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கொள்கைகளை பாதுகாப்பதில் எடுத்துக் கொண்ட அக்கறை. இவை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று கூறியுள்ள இடது ஜனநாயக முன்னணி, கடந்த ஐந்தாண்டுகளில் 2016 தேர்தல் அறிக்கையில் தாங்கள் அளித்த 600 வாக்குறுதிகளில் 580 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.

;