election2021

img

கேஸ் விலையை ஏத்திட்டு... யாரை ஏய்க்க ஓசி சிலிண்டர்..?

மதுரை:
காயத்திரி மந்திரம் சொன்னால் கொரோனா வைரஸ் குறையுமா? என்பது குறித்து ரிணிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு நடத்தப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எந்த மந்திரம் கூறினால் எரிவாயு விலை குறையும் என்பதை திருப்பரங்குன்றம் வாக்காளர்களுக்கும் தமிழக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார்.

மாவீரன் பகத்சிங்கின் 90-வது நினைவு தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் செவ்வாயன்று கடைப்பிடிக்கபட்டது. அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், வாலிபர், மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாலிபர், மாணவர் அமைப்பினர் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியினை துவக்கினர். அதன் ஒரு பகுதியாக சமையல் எரிவாயு விலை உயர்வை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக 12 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கேஸ்சிலிண்டர் உருளையை வடிவமைத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்த சிலிண்டர் உருளையில் “,கேஸ் விலையை ஏத்திட்டு.. யாரை ஏய்க்க ஓசி சிலிண்டர்...?”  என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.410.50 விற்ற சிலிண்டர் 2021 மார்ச் 16 ஆம் தேதி நிலவரப்படி ரூ.874-க்கு விற்கப்படுகிறது. என எழுதப்பட்டிருந்தது. இந்த பிரம்மாண்ட சிலிண்டர் உருளையை திருப்பரங்குன்றம் வாக்காளர்களும், முருகன் கோவிலுக்கு வந்து சென்றவர்களும் பார்த்து சென்றனர். உருளை வைக்கப்பட்ட ஒருமணி நேரத்தில் சுமார் ஆயிரம் வாக்காளர்கள் இதை பார்த்துச்சென்றனர். இந்த சிலிண்டர் உருளை பிரச்சாரம் தொகுதி முழுவதும் வலம்  வர உள்ளது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாயின் பிரச்சாரம், வாக்காளர்கள் தெரிவிக்க விரும்பும் கோரிக்கைகள், எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து தெரிவிக்க tinyurl.com/ ponnuthai4tpk என்ற செயலி அறிமுகப்படுத்தபட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், காயத்திரி மந்திரம் சொன்னால் கொரோனா வைரஸ் குறையுமா? என்பது குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எந்த மந்திரம் கூறினால் எரிவாயு விலை குறையும் என்பதை திருப்பரங்குன்றம் வாக்காளர்களுக்கும் தமிழக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையின் உயரம் 316அடி இந்த மலையின் உயரத்திற்கு நிகராக சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் பிரதமர் மோடி தமிழக மக்களை சுள்ளி பொறுக்கி அடுப்பு எரிக்கும் நிலைக்கு தள்ளி விடுவார். ஆனால் 6 சிலிண்டர்கள் கொடுக்கப்போவதாக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். முதல்வரின் அறிவிப்புக்கும், மோடியின் நடவடிக்கைக்கும் உள்ள ஏமாற்று வேலையை தமிழக மக்கள் நம்பக்கூடாது. திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.பொன்னுத்தாய் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது தான் தெரியவேண்டி உள்ளது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல கட்சியின் மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் வைத்திருந்தார். இப்போதும் வைத்துள்ளார். ஆனால், தொகுதி மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அவர் வாக்கு கேட்டு செல்லும் போது தற்காப்புடன்  செல்கிறார்.ஆனால் எஸ்.பொன்னுத்தாய் நேரடியாக வாக்காளர்களை சந்திக்கிறார். இதன் மூலம் யார் வெற்றி பெறுவார் என்பது தெளிவாக விட்டது என்று கூறினார்.

;