election2021

img

பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஆதரித்தால் 2006 தேர்தல் கதிதான் அதிமுகவுக்கு....

ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் இழக்க போகிறோம் என்பதால் இப்போதே ‘பிதற்றல்’ அதிகமாகி இலவச அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி அள்ளி வீசி வரும் நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை வயிற்றில் ‘புளியைக் கரைத்து வருகிறது”.

இதற்கு காரணம், 2001ஆம் ஆண்டில் 141 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் நெருக்கடிக்கு அடிபணிந்து ஆடு,கோழி,மாடுகளை பலியிட தடை செய்து  அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.

இந்துக் கோயில்களில் ஆடு, கோழிகள் உட்பட எந்த விலங்குகளையுமே பலி கொடுக்கக் கூடாது என்று ஜெயலலிதா கொண்டு வந்த சட்டம் தமிழக முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மக்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பின. ஆனாலும் ஜெயலலிதா இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தது. ஆடு, மாடு,கோழி பலி தடை சட்டம் ஜெ., அரசுக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.

குறிப்பாக அதிமுக-வின் அசைக்கமுடியாத வாக்கு வங்கி என்று கூறிக் கொண்ட பெண்கள் மற்றும் கிராமப்புற வாக்கு வங்கி  முழுமையாக அதிமுகவை கைவிட்டது என்றே சொல்ல வேண்டும். விளைவு,188 இடங்களில் போட்டியிட்ட அதிமுக தோல்வியைத் தழுவியது. ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தை இழந்தார். 61 இடங்களில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றது.2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, “ஆடு கோழி பலியிட தடை விதித்ததற்காக தமிழக மக்களிடம் பகிங்கரமாக ‘பாவ மன்னிப்பு’ கோரினார். மேலும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தமிழக மக்களுக்கு நான் செய்த மிகப்பெரிய துரோகம் என்றும் இனி அந்த தவறை மீண்டும் ஒரு முறை செய்ய மாட்டேன் என்றும் சத்தியப் பிரமாணம் செய்தார்.
அதன்பிறகே மக்கள் மீண்டும் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கொடுத்தனர். அவர் உயிருடன் இருந்த வரைக்கும் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் பரிதவித்தது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவினால் உருவான வெற்றிடத்தை பயன்படுத்தி அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றிட வேண்டும் என்று பாஜக வெறித்தனமாக விளையாடி வருகிறது.

அதன் விளைவுதான்,  நோட்டாவை விட மிகக் குறைவாக வாக்குகளை வாங்கியிருந்தாலும், அடிமை ஆட்சியாளர்களிடம்  20 இடங்களைப் பெற்றது.அடுத்த கட்டமாக, சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களிடம் மதரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியை கையாண்டு வரும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் “ஆசை வார்த்தை காட்டி மற்றும் அச்சுறுத்தி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும்” என்று தைரியமாக அறிவித்திருக்கிறது.
அதுமட்டுமன்றி 1982 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கிராமத்தில் நடந்த மதக் கலவரம், அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி மேல் மணக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானதை நியாயப்படுத்தியும் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும், இஸ்லாமிய, கிருத்துவ மத வழிபாடு ஆலயங்களில் ஒலிபெருக்கி அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சார்புக்கு ஆதரவாக வெளிவந்த ஓய்வுபெற்ற நீதிபதி பி.வேணுகோபால் தலைமையிலான ஆணையத்தின் விபரீத பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று விஷம் கக்கி இருக்கிறது.

பெரும்பாலான மாநிலங்களில் மூக்கு அறுபட்ட நிலையில், இறைச்சிக்காக கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பொருட்கள் கிடைத்து வருவது முற்றிலும் தடுக்கப்படும், பசுவதை தடை சட்டம் முறையாக அமல்படுத்தப்படும், இந்துக் கோவில்களின் நிர்வாகம் இந்து ஆன்றோர் சான்றோர், துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்,  இந்து அல்லாதவர்களுக்கு கோவில் நிலங்களை வாடகை அல்லது குத்தகை விடக் கூடாது என்ற விதியை முழுமையாக கடைப்பிடித்து ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப் படுவார்கள். சமபந்தி போஜனத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றெல்லாம் விஷமத்தனத்தை விதைத்திருக்கிறது. இதற்கு தமிழக வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட தயாராகிவிட்டனர். 20 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழப்பது உறுதி!

ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜகவை அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றவில்லையெனில், 2006 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அதே கதிதான் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கும் ஏற்படும்.

;