election2021

img

கடனாளி அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும்? கந்தர்வகோட்டையில் அ.சவுந்தரராசன் கேள்வி....

அறந்தாங்கி:
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரைக்கு, அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசினார்.

அப்போது அவர், மாநில உரிமைகள், மாநிலமக்களின் நன்மை என்பது மாநில தலைவர்களுக்குதான் தெரியும். தமிழகத்தில் இருக்கிற கட்சிகள் மாநில உரிமைகளுக்காக, மாநில சுயாட்சிகள் என்று அறிவித்து கொண்டு இருக்கும்வரிசையில்தான் அதிமுக வருகிறது. ஆனால்இந்த கொள்கைகளுக்கு நேர் மாறாக நடவடிக்கை எடுக்கிற பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டு, தோளில் சுமந்து தமிழக தெருக்களில் வருவது தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமானம்.டெல்டா பகுதியில் விவசாயத்தை அழிப்பதற்கு, இப்பகுதியில் இருக்கும் விளை நிலங்களைகார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிப்பதன் மூலம்மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு எத்தனித்தார்கள் தொண்டு நிறுவனங்கள். அத்தகையமுயற்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளின் கடும்போராட்டத்தினால் தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கின்றன. வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த முயற்சிகளை நிரந்தரமாக தடுக்க ஆட்சி மாற்றம் வேண்டும்.

30 ஆண்டுகள் ரத்தம் சிந்தி உழைத்த தொழிலாளிக்கு ஓய்வு பணம் தர மறுக்கிறார்கள். இதற்காகவே அதிமுக அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். கொரோனா காலத்தில் யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று காத்திருந்த முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவாமல் இருந்திருந்தால் ஏராளமான பட்டினிச் சாவு நடந்திருக்கும்.கொரோனா காலத்தில் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு குடும்பத்திற்கு ரூ.7500 கொடுங்கள், 6 மாதத்திற்கு ஒன்றரை லட்சம் கோடிஆகும் என்று மத்திய அரசிடம் சொன்னோம். மாநில அரசை உதவச் சொன்னோம். இதற்காக பல போராட்டங்கள் நடத்தியதால் ரூ.1000 கொடுத்தார்கள். இருப்பதை எல்லாம் இழந்து தெருவிற்கு வந்த இந்த காலகட்டத்தில்தான் 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான லாபத்தைஅம்பானி, அதானி ஈட்டினார்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் இவர்களுக்கு 11 லட்சம்கோடி ரூபாய் வரிச்சலுகை கொடுத்திருக்கிறார்கள். எனவே இது யாருக்கான ஆட்சி என்பதைமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து கொண்டு, தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை அதிமுக கொடுத்திருக்கிறது. இவைகளை நிறைவேற்ற முடியுமா? இலவசங்களுக்கு பதில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்பொழுது மக்கள் கையில் பணம் இருக்கும். வருமானம் இருக்கும். வளர்ச்சி அடையும். மக்கள் தங்களுக்கு தேவையானதை அவர்களே வாங்கிக் கொள்வார்கள். பொருளாதாரம் வளரும். அதற்கு மக்களுக்கு விரோதமாக செயல்படும் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக 40 ஆண்டுகளாக போராட்டக் களத்தில் முன்நின்று போராடிக் கொண்டிருக்கும் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.சின்னதுரைக்கு அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஏ.ராமையன், சிஐடியு மாவட்டத் தலைவர் முகம்மதலி ஜின்னா, சிஐடியு மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன், சிபிஎம் ஒன்றியச்செயலாளர் ரத்னவேல், காங்கிரஸ் தெற்கு வட்டாரத் தலைவர் ராமையன், வடக்கு வட்டாரத் தலைவர் மாயக்கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், திராவிடர் கழகம் சித்ரவேல், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;