election2021

img

ஓட்டை வண்டியும்… ஜோல்னா பையும்… (கோவில்பட்டி தொகுதி ஸ்பெஷல்)

‘யாரு அந்த ஓட்ட வண்டியில் ஜோல்னா பையோடு வருவாரே அவரா… என்று எங்கள் அப்பாவை அடையாளப்படுத்திய வார்டு மக்கள் ஒரு புதிய டிவிஎஸ் மொபெட்டை அப்பாவுக்கு வாங்கி கொடுத்தார்கள்’’- இது கோவில்பட்டி சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனின் மகள்களின்  நினைவு கூரல்.        

 கே.சீனிவாசனின் மகள்கள் நந்தாவும், பிரீத்தா தெரசாவும் பேசும் காணொலி காட்சி ஒன்று குடும்பத்திலும் சமூகத்திலும் எத்தகையநன்மதிப்பை சீனிவாசன் பெற்றுள்ளார் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது.  அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: 
அப்பாவை செங்கொடி ஏந்திய ஒரு போராளியாகத்தான் பார்க்கிறோம்.  நிறைய புத்தகங்கள் படிப்பார். 2000-இல் கட்சியின் முழு நேர ஊழியரானார். அப்போது கான்வெண்டிலிருந்து பொதுப்பள்ளியில் எங்களைச் சேர்த்தார்.

ஏன் என்று கேட்டபோது, தோழர்களின் பிள்ளைகள் எல்லாம் அங்குதான் படிக்கிறார்கள். கஷ்டப்படும் பிள்ளை களோடு பழகும் வாய்ப்பு அங்குதான் கிடைக்கும் என்று சொன்னார். நாங்கள் விரும்பிப் படித்து பத்தாம்வகுப்பில்  பள்ளி அளவில் (நந்தா) முதல் இடம் பெற முடிந்தது.வார்டு கவுன்சிலராக இருந்தபோது யாரிடமும் காசு வாங்காமல் சேவை செய்வார். பணம் வாங்கிக் கொள்ள வற்புறுத்துகிறவர்களிடம் ஒரு கம்யூனிஸ்ட்டிடம் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பார். சின்னவயதிலிருந்தே பார்த்திருக்கிறோம், அப்பா ஒரு டிவிஎஸ் வண்டிதான் வைத்திருந்தார். யாரு அந்த ஓட்ட வண்டியில் ஜோல்னா பையோடு வருவாரே அவரா… என்று எங்கள் அப்பாவை அடையாளப்படுத்திய வார்டு மக்கள் ஒரு கட்டத்தில் புதிய டிவிஎஸ் மொபெட்டை அப்பாவுக்கு வாங்கி கொடுத்தார்கள். அப்பா எது சொன்னாலும் சரியாக இருக்கும். எங்கள் அப்பா எப்போதும் எங்களுக்கு ஹீரோதான்.

;