election2021

img

தமிழ்நாடு தேர்தல் ஸ்பெஷல்... இலவு காத்த கிளிகள்...

தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில், நடைபெற்று வரும் விவாதங்களில் பிரதமராகவே மாறி கொக்கரிக்கும் இரண்டு பாஜக பிரபலங்களை தில்லி மேலிடம் கைகழுவி விட்டு விட்டதே என்று சோகப்பாட்டு பாடுகிறார்கள், அவர்களது விசுவாசிகள். அவர்களின் ஆதங்கத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளார், மற்றொரு பாஜக பிரமுகர்.

தமிழக பாஜக தலைவர்களிடையே, கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருக்கும் உட்கட்சிப் பூசல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், நாராயணன் திருப்பதி, டாக்டர் ராம சுப்பிரமணியன் உள்ளிட்டோரே தொலைக்காட்சி விவாதங்களில் பல்வேறு முகங்களில் தோன்றுவார்கள். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

பாஜகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட ராகவனுக்கும் நாராயணன் திருப்பதிக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்கும் நம்பிக்கை பொய்த்துப் போனதால் மனஉளைச்சலில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
இதற்கு காரணம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் முறையே கே.டி.ராகவனும், நாராயணன் திருப்பதியும் போட்டியிடுவார்கள் என்ற பேச்சு கடந்த பல மாதங்களாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலேயே எழுந்தது. ஆனால், அந்த இரண்டு தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஆயிரம் விளக்கும், துறைமுகமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தொகுதிகளிலும் முறையே நடிகை குஷ்பு, வினோஜ் பி.செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நடிகை குஷ்பு, சில மாதங்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார். வினோஜ், கட்சியில் ரொம்ப, ரொம்ப ஜூனியர். அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் அங்கீகாரம் கிடைத்த நிலையில், கே.டி.ராகவனுக்கும், நாராயணன் திருப்பதிக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் கே.டி.ராகவன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஆகிய மூத்த தலைவர்களுடன் மிக, மிக நெருக்கமான நட்பு கொண்டிருப்பவர்.

இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் இரண்டு கழகங்களின் அரசியல் சித்துவேலைகளை உளவுபார்த்து, பாஜக மேலிடத்திற்கே சொல்பவர்தான் கே.டி.ராகவன். இந்தளவுக்கு நம்பிக்கைக்குரியவராக உள்ள தனக்கே தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மேலிட தலைவர்கள் உருவாக்கித் தரவில்லையே என்ற விரக்தியில், கே.டி.ராகவன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் உள்ளாராம்.

;