election2021

img

அதிமுக இறுதிப் பட்டியல் வெளியீடு... முன்னாள் அமைச்சர்கள்- எம்பிக்களுக்கு வாய்ப்பு....

வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தற்போதைய அமைச்சர்களான நிலோபர் கபில், வளர்மதி, பாஸ்கரன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இம்முறை தொகுதி மாற்றப்பட்டுள்ளார்.

 15 வது சட்டப் பேரவையில் உறுப்பினர்களாக இருந்த மூத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில், இளைய தலைமுறையான கள்ளக்குறிச்சி அ.பிரபு, குன்னூர் ராமர் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து மூன்று முறை வெற்றி பெற்ற ஓ.கே. சின்ராஜ், கம்பம் ஜக்கையன் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, தளவாய் சுந்தரம், நத்தம் விஸ்வநாதன், ஆனந்தன், மாதவரம் மூர்த்தி, பி.வி. ரமனா, சோமசுந்தரம், அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, ஏ.கே. செல்வராஜ் மற்றும் கடந்த முறை தோல்வியடைந்தவர்கள், மக்களவை தேர்தலில் தோற்றவர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கத்திற்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மறைந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு குடும்பத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து ஆதி ராஜாராம் நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கெனவே இவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து களம் கண்டு தோற்றவர். சைதை துரை சாமிக்கு இந்த முறை சைதாப்பேட்டை தொகுதியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகரில் புது முகமான ஆர்.எஸ். ராஜேஷ் போட்டியிடுகிறார்.

பாமக போட்டியிடும் தொகுதிகள்
அதிமுக அணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, செஞ்சி, சங்கராபுரம், திண்டிவனம், கீழ்பென்னாத்தூர், காஞ்சிபுரம்,  திருப்போரூர், நெய்வேலி, விருத்தாசலம், திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, ஜெயங்கொண்டம்,மேட்டூர், சேலம்(மேற்கு), திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், வந்தவாசி(தனி), கீழ்வேளூர்(தனி), பூந்தமல்லி(தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

;