election2021

img

களம் நமதே... வெற்றி ஒன்றே இலக்கு.... கண் துஞ்சாமல் கடமையாற்றுவோம்....

தமிழகத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  கடந்த 15 தேர்தல்களில் இல்லாத, முற்றிலும் புதிய சூழலில் தமிழகம் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, அதிமுக-வுடன் கூட்டணி என்று அறிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருபடி மேலே சென்று அதிமுக-வுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று அறிவித்தார். வரலாற்றில் முன்னெப்போதுமே தமிழக அரசியல் களத்தில் பாஜக இந்த அளவிற்கு இடம்பெற்ற கட்சியாக இருந்தது இல்லை. 

இதற்கு முன்பு பாஜக தமிழகத்தில் தனியாக நின்றிருக்கிறது; கூட்டணி சேர்ந்தும் நின்றிருக்கிறது. அன்றைக்கெல்லாம் தமிழகத்தில் காங்கிரஸ், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள் - இவர்கள்தான் பிரதான கட்சிகளாக முன்னிறுத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைக்கு இந்தப் பிரதான கட்சிகளையெல்லாம் மிஞ்சி, பாஜகதான் பிரதான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று சொல்லும் அளவிற்குபாரதிய ஜனதா கட்சி ஒரு மாற்று சக்தியாக களமாட அனுமதிப்பது ஆபத்தின் உச்சமாகும்.மத்திய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக, நாசகரப் பொருளாதார கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கார்ப்பரேட்முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்படுகின்றன. விமான நிலையம், ரயில்வே, கனிமவளங்கள், இன்சூரன்ஸ், தொலை தொடர்பு அனைத்தும் ஏலம் விடப்படுகின்றன. விவசாயத்தையும், கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தில்லியில் நான்கு மாதங்களாக போராடி வரும் விவசாயிகளை கண்டு கொள்ள மறுக்கிறது. 

அரசியல் சாசனத்தின் அடிப்படைகளை தகர்க்க திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே மதம் என்ற ஒற்றைத் தன்மையை அரங்கேற்றி வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு சாவு மணி அடித்து வருகிறது. இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

வஞ்சக பாஜகவுக்கு துணை அமைப்பான அதிமுக
நீட் தேர்வில் துவங்கி, இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவது வரை தமிழகத்திற்கு மத்திய பாஜக அரசாங்கம் செய்யாத துரோகமா? ஜிஎஸ்டியில் துவங்கி, பணமதிப்பு நீக்கத்தில் துவங்கி, பேரிடர் நிவாரண மறுப்பு வரை, கொரோனா காலத்து துயரங்கள் வரை தமிழக மக்களுக்கு மோடி அரசாங்கம் செய்யாத வஞ்சகமா... எத்தனை எத்தனை கொடுமைகளை, தமிழகத்திற்கு எதிரான வன்மங்களை, தமிழ் மக்களுக்கு எதிரான குரூரங்களை ஏவிவிட்டிருக்கிறது பாஜக!
நாடாளுமன்றத்தில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சியின் ஒரு துணை அமைப்பாகவே மாறிப் போய் செயல்பட்ட காலம் இந்தக் காலம்.மக்களை மதரீதியாக துண்டாடும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் பாஜக அரசு முன்மொழிந்த போது, 11 உறுப்பினர்களை கொண்ட அதிமுக அந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்திருந்தால் நிச்சயம் அது நிறைவேறி இருக்காது தோல்வியடைந்திருக்கும். சிறுபான்மை மக்கள் அச்சத்திலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். அதேபோல, முத்தலாக் மசோதா வந்தபோது, அதிமுக பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் அழித்தொழிக்கும் கொடிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதும், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது.

ஆபத்துக்கு நீருற்றி வளர்க்கும் அதிமுக
நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வருகிற எல்லா சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் கை தூக்கும் கைப்பிள்ளை போல அதிமுக நடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு திணிப்பு, இந்தி - சமஸ்கிருதம் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு வெட்டிக் குறைப்பு, மாநிலத்திற்கு நியாயமாக அளிக்க வேண்டிய நிதி தர மறுப்பது, இயற்கை இடர்பாடுகளுக்கு கோரிய நிதி வழங்க மறுப்பு போன்ற தமிழக நலன்களை புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்து, கிஞ்சிற்றும் அதிமுக கவலைப்படவில்லை.தமிழ் மண் என்பது மதவெறிக்கு எதிரான மண். கம்யூனிச சித்தாந்தமும் திராவிட கோட்பாடும் வேரூன்றிய மண். மனிதநேயமும் மதநல்லிணக்கமும் வலுவாக வளர்ந்து நிற்கும் மண். இத்தகைய மண்ணில் மதவெறியை விதைக்க, மக்களைத் துண்டாட முயற்சிக்கும் பாஜகவுக்கு அதிமுக அப்பட்டமாக துணை போகிறது. அந்த ஆபத்திற்கு நீரூற்றி உரமிட்டு வளர்ப்பதற்கு முயற்சிக்கிறது.

பட்டா கொடுக்க துப்பில்லை வாஷிங்மெஷின் தருகிறார்களாம்
இதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 4 ஆண்டு காலம் ஆட்சி நடந்திருக்கிறது. அந்த ஆட்சியின் அலங்கோலம் சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதை அவர்களது தேர்தல் அறிக்கையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. வெற்றி பெற்று வந்தால், எல்லோருக்கும் வாஷிங் மெஷின் தருவதாக கூறியிருக்கிறார்கள். குடியிருப்பதற்கு வீடே இல்லை; குடிப்பதற்கு கஞ்சி இல்லை; செய்வதற்கு வேலை இல்லை; இருக்கிற வீடுகளில் பலவற்றில் கழிப்பறைவசதியே இல்லை; ஏராளமான கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் குடிநீர் வசதி இல்லை; பல்லாண்டு காலமாக புறம் போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்க துப்பில்லை; இன்னும் கூட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளி தூய்மை செய்யும் அந்தக் கொடுமை என்பது நீடிக்கிறது. ஆட்சியில் இருந்த காலத்தில் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், இப்போது வாஷிங் மெஷின் தரப் போகிறார்களாம்.

கடந்த தேர்தலில் இப்படித்தான் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டது அதிமுக. எல்லோருக்கும் இலவச செல்போன் தரப்போகிறோம் என்றார்கள். 10 லட்சம் வீடுகள்கட்டித் தருவோம் என்று சொன்னார்கள். அப்படி வாக்குறுதிகளை அள்ளி விட்டோம், அவை என்னாயிற்று என்பதைப் பற்றி இந்தத் தேர்தல் அறிக்கையில் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

ஈவிரக்கம் இல்லை அலட்சியத்தின் உச்சம்
ஆனால் இவர்கள் கடந்த 4 ஆண்டு காலத்தில் எத்தனைஎத்தனை கொடுமைகளை தமிழக மக்களுக்கு இழைத்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 உயிர் களைப் பறித்தார்கள்; ஊடகங்களில் பார்த்துத்தான் நானேதெரிந்து கொண்டேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாக்கூசாமல், கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் கூறினார்.கொரோனா என்ற பெரும் ஆபத்து வரப் போகிறது என்று தெரிந்தும்கூட, அதைப் பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் போது, மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஏதும் இன்றி, அது ஒரு பிரச்சனை இல்லை. இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று அலட்சியத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியவர் முதலமைச்சர் தான். அதனுடைய விளைவுஎன்ன? பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். தமிழகமே துயரத்தின் பிடியில் சிக்கியது. ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. முற்றிலும் கையாளாகாத அரசாக அம்பலப்பட்டு நின்றது அதிமுக அரசு.

நிராதரவாக விடப்பட்ட இளைஞர்கள்
இவர்களது ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலைமை அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கடன் வலை விரிந்து பரந்து தமிழகத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நிலைமையும், அதை நம்பியிருக்கும் லட்சோப லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் நிலைமையும் துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது. லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள போதிலும், அவற்றை நிரப்பாததன் விளைவாக, தமிழகத்து இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி நிராதரவாக விடப்பட்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கதி இப்படி இருக்க, அமைச்சர்களின் பைகள் மட்டும் நிரம்பிக் கொண்டேயிருக்கின்றன. இவர்கள் அடித்த கொள்ளையை, ஊழலை பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே செல்லலாம். முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெண்களுக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளையும் கொடுமைகளையும் தடுத்து நிறுத்த அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யப்படவில்லை. பொள்ளாச்சியே அதற்கு சாட்சி. உச்சகட்டமாக, தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற அதிகாரியே, தனக்கு கீழே வேலைசெய்யும் பெண் உயரதிகாரியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குகிற இழிவை அதிமுக ஆட்சியில் தமிழகம் சந்திக்கிறது.இவர்களது ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை வானத்தில் பறக்கிறது. சமையல் எரிவாயு விலையை கேட்டாலே தாய்மார் களின் வயிறு எரிகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் தீயிட்ட புழுக்களாக துடித்துக் கொண்டுள்ளனர். இத்தனைக்கும் பிறகும், இந்த ஆட்சி நீடிப்பது தமிழக மக்களை காவு கொடுப்பதற்கே இட்டுச் செல்லும்.

வெற்றி முரசு கொட்டுவோம்!
அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை வீழ்த்துவோம்; அதிமுகவின் மீது ஏறி தமிழகத்தை மதவெறி மண்ணாக மாற்ற முயற்சிக்கும் பாஜகவை முற்றாக முறியடிப்போம் என்ற முழக்கத்தோடு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓர் அங்கமாக களம் காண்கிறது.பாஜக அதிமுக அணியை முறியடிப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதே இந்த தேர்தலில் தாரக மந்திரம்.தமிழகத்தில் எட்டு திசையிலும் இந்த கோஷம் எதிரொலிக்க வேண்டும். 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் நாம் என்ற முறையில் களம் காண வேண்டும். கூட்டணி கட்சி நிர்வாகிகள், நடுநிலையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து களம் காண்போம், கண்துஞ்சாமல் கடமையாற்றுவோம். வெற்றி முரசு எட்டுதிசைக்கும் கொட்டட்டும்.

கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)


தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு 1-ஆம் பக்கம் மற்றும் 3-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகுப்பில் ஒரே தொகுப்பாக உள்ளது.  

;