election2021

img

பாஜக - அதிமுக கூட்டணியை நூறு முறை தோற்கடியுங்கள்...

அரூர்:
நாட்டின் கஜானாவிற்கு பணத்தை வாரி வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க துடிக்கும் மோடி, எடப்பாடியை ஒருமுறையல்ல, நூறு முறை தோற்கடியுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசினார்.

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.குமாரை ஆதரித்து கட்சியின்மத்தியக் குழு உறுப்பினர்  அ.சவுந்தரராசன் காளிப்பேட்டை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு,ஈச்சம்பட்டி, அரூர் அம்பேத்கர் நகர் ஆகியஇடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அ.சவுந்தரராசன் பேசியதாவது: நம் ஒவ்வொருவரின் வீட்டின் சமையலறையிலும் மோடி, எடப்பாடி அரசுகளின் பாதிப்புகள் தெரியும். கடந்த தீபாவளிக்கும், அதற்கு முந்தைய தீபாவளிக்கும் நேரடியான பாதிப்பு வியாபாரிகளுக்கு தெரியும். நமக்கு பொருளாதார கஷ்டங்களை ஏற்படுத்திய அவர்களை எப்படி அனுமதிக்க முடியும்.தமிழக, இந்திய மக்கள் மேலும் 50விழுக்காடு அளவிற்கு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டு விட்டனர் என ரிசர்வ் வங்கிகூறியுள்ளது.நம் ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும், வீட்டிலும் பண சுழற்சி என்பது இப்போது இருக்கிறதா? 2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுத்த  கலால்வரி ரூ.3.16 பைசா  ஆகும். ஆனால், தற்போதுரூ.36 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் சமையல் எரிவாயு விலையை ஒரே மாதத்தில் ரூ.125உயர்த்தி நம் மாத வருவாயை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளது. இப்படிப்பட்ட கொடுங்கோன்மை அரசை உலகத்திலேயே எங்கும் பார்த்ததில்லை. இந்த ஆட்சி தொடரவேண்டுமா? இந்த லட்சணத்தில் ஆண்டிற்கு6 சிலிண்டர் இலவசம் என எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறார். பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் அரை கட்டணம் என அறிவித்துள்ள எடப்பாடி,அதை எப்படித் தரமுடியும்? அதிமுக அரசு,போக்குவரத்து தொழிலாளர்களின் சொந்தப்பணம் ரூ.8 ஆயிரம் கோடியை திருடி செலவழித்துக் கொண்டிருக்கிறது. ரூ.5 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ள நீங்கள் எப்படி இலவசங்களை மக்களுக்கு தருவீர்கள்? என அ.சவுந்தரராசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களுக்கான திட்டங்களை அமலாக்க நேர்மையான - முறையான திட்டம் தேவை. மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்துவினையாற்றும் அரசியல் துணிவு அதிமுகஅரசிற்கு இல்லை. அடிமை அரசாக எடப்பாடிஅரசு உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு துணிவு இருக்கிறது. அதனை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிறைவேற்றும். 3.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்களில் படிப்படியாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின். தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியபிரிவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சமூக நீதி நிலைபெறும். இதுதான் இதற்கு பொருள். பொதுத்துறையை தனியார் மயமாக்கும் பாஜகவிற்கு காவடி தூக்கும் எடப்பாடியால் சமூக நீதியை எப்படிபாதுகாக்க முடியும்?

நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி என ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் இருந்த நெசவுத்தொழில் தற்போது தேய்ந்து வருகிறது. எட்டு வழிச்சாலை போன்ற  விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பேன் எனகூறுகிறார் எடப்பாடி. ஏற்கனவே 3 சாலைகள்இருக்கும்போது, எதற்கு இப்போது ரூ.10ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய சாலை? இதில், பல ஆயிரம் கோடிகளை நிதின் கட்காரியும், எடப்பாடியும் கொள்ளையடிப்பதற்கு நினைக்கும் இத்திட்டத்தை மக்கள், விவசாயிகள் போராடி தடுக்க வேண்டும். அதற்குமார்க்சிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்.இப்பகுதியில் உள்ள இரும்புத்தாது, பாக்சைட் போன்ற கனிம வளங்களை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் அம்பானி, அதானி போன்றோரின் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லத்தானே இந்த சாலையை செயல்படுத்தத் துடிக்கின்றனர். இப்படி எல்லா வகையிலும் மக்களை ஏமாற்றும் பாஜக, அதிமுக சுயநல கூட்டணியை ஒருமுறை அல்ல நூறுமுறை தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.குமாருக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, அரூர் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு சிபிஎம்நகரச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். இதில், திமுக நகர செயலாளர் ஏ.சி.மோகன், சிபிஎம் மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, ஜி.ஆனந்தன், பி.சுந்தர்ராஜன், ஆர்.பத்ரி, தீபா மற்றும்மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், முன்னாள் கவுன்சிலர் முகமதுஅலி, எஸ்.சி.பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ஷாக்கன் ஷர்மா, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் காசி.தமிழ்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற வாக்குச்சேகரிப்பு இயக்கத்திற்கு, திமுக அரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வே.சுந்தரராசன் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் பகுதி பொறுப்பாளர் ஏ.டி.கண்ணன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டச் செயலாளர் வஞ்சி, கண்ணகி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;