election2021

img

மோடியின் சரிவு தமிழகத்தில் இருந்து துவங்கும்... சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா நம்பிக்கை....

கோவை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி மகத்தான வெற்றி பெறும். பாஜக, மோடியின் தோல்வி தமிழகத்தில் இருந்து துவங்கும் என சிபிஐ பொதுச்செயலாளர்  து.ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூரில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஐ மேற்கு மண்டலக்குழு செயலாளர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றி னார். 

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் கணபதி சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜோ.இலக்கியன், திராவிட தமிழர் கட்சியின் வழக்கறிஞர் வெண்மணி மற்றும் திமுகஉள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் உரையாற்றினர்.இக்கூட்டத்தில் பங்கேற்ற து.ராஜா பேசுகையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் இருந்து அதிமுக அகற்றப்படும். மோடிக்கான தோல்வி தமிழகத்தில் இருந்து துவங்க உள்ளது. ஆகவே இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. மோடி, அமித்ஷாவின் பொய்கள் தமிழகத்தில் எடுபடவில்லை என்பதால் இவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.  இந்திய மக்களை மதம், கலாச்சாரம், மொழி, கடவுள் ஆகியவற்றின் பெயரால் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் வன்கொடுமைகள் நடைபெறு கின்றன.  தாய்மார்கள், பெண்குழந்தைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் அனைவரும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் படுகின்றனர் பாஜக ஆட்சியில். இப்படிப்பட்ட கொடுமைகள் தமிழகத்தில் நடைபெறக்கூடாது. இது அயோத்திதாசர், பெரியார், சிங்காரவேலர் ஆகியோரால் பண்படுத்தப்பட்ட மண். சமூக சீர்திருத்தங்களால் பண்படுத்தப்பட்ட மாநிலம் தமிழகம். இங்கு பாஜக ஒருபோதும் நுழைய தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அத்தகைய நல்லதொரு தீர்ப்பை தமிழக வாக்காளர்கள் அளிக்க வேண்டும் . 

கோவை வந்த மோடி, சிறுகுறு தொழில்கள் அழிந்துவிட்டதே என இப்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார். இதற்கு யார் பொறுப்பு.  மோடி ஆட்சிக்கு வந்தவுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால் அமைப்பு சார்ந்த மற்றும் சாராத
அனைத்து தொழில்களும் நிலை குலைந்து போயின. அடுத்து ஒரே நாடு, ஒரே வரி என ஜிஎஸ்டி வரியை அறிவித்தார். குஜராத்தில்முதல்வராக இருந்போது மோடி ஜிஎஸ்டியை எதிர்த்தார். மத்தியில் அதிகாரத்திற்கு வந்தபிறகு அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். இதன் காரணமாகவே தொழில்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஜிஎஸ்டி வரியை இவர்கள் திணித்தார்கள். இப்போது மக்களின் உழைப்பின் காரணமாக உருவான பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருகிறார்கள். 

மேலும் பொய்களை அள்ளிவிடும் பிரதமராக மோடி இருக்கிறார். ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவோம் என்றார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றார். இவர் அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல. தற்போது ஐம்பது ஆண்டுகாலமாக இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள் இளைஞர்களுக்கும் ஆதரவாகவும் இல்லை. பெண்களுக்கும் ஆதரவாகவும் இல்லை. தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றி தொழிலாளர்களும் இவர்களுக்கு எதிராக உள்ளனர். விவசாய விரோத சட்டங்களை அறிவித்ததால் விவசாயிகள் இன்றுவரை தலைநகர் தில்லியில் போராடிக்கொண்டி ருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை திணித்து மாணவர்களின் நலனுக்கு எதிராகவும் இருக்கிறார்கள். அனைவரின் நலனுக்கும் எதிராக அம்பானி, அதானிகளுக்காக உள்ள இந்த பாஜக மோடியை எடப்பாடி பழனிச்சாமி ஏன் ஆதரிக்க வேண்டும்?  

மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறை உண்டா. தமிழகத்தின் நலனில் எந்த அக்கறை யும் கொள்ளாத இந்த அதிமுக, பாஜக அணியை தமிழக மக்கள்  தோற்கடிக்க வேண்டும்.களச்சூழலும் அதுவாகத்தான் இருக்கிறது. இந்திய நாட்டிற்கே தமிழகம் வழிகாட்டட்டும். அந்த வகையில் இந்த வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்திற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும்  என்றார்.

அதிமுக எம்எல்ஏ போட்ட சாலையில் அதிமுக வேட்பாளர் விழுந்து கால் முறிந்ததுபி.என்.புதூரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசியதாவது, தமிழக தேர்தல் களம் தற்போது வித்தியாசமாக உள்ளது. பொதுவாக தேர்தலில் எங்கள் தலைவர் படம் ஏன் போடவில்லை, சின்னம் ஏன் போடவில்லை என கூட்டணி கட்சியினர் உரிமையோடு சண்டை போடுவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், அதிமுக, பாஜக கூட்டணி இதில் வித்தியாசமாக உள்ளது. மோடி படத்தையும், பாஜக கொடியையும் தவிர்த்துவிட்டு தேர்தலை சந்திக்கிறார்கள். இதில், உச்சம் என்னவென்றால் ‘பாஜக வேட்பாளர்கள் கூட மோடி படத்தை போடாமல் வாக்கு கேட்கச் செல்வதுதான் ‘ஹைலைட். உப்பிட்டு சாப்பிடும் எவரும் இதுபோன்ற அவமானத்தை சந்தித்திருக்கமாட்டார்கள்.

18 மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94 ஆகவும், சமையல் எரிவாயு விலைரூ.1000த்தை நெருங்கியுள்ளது. ஆனால், உழைப்பாளி மக்களின் ஊதியம் கொஞ்சமும் உயரவில்லை. எனவேதான் தமிழக மக்கள் அதிமுக, மோடி வகையறாக்களை முன்னங்கால் பிடரியில் அடிக்க விரட்டியடிக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என எடப்பாடி விளம்பரம் செய்கிறார். பொள்ளாச்சி சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்து போய்விடுமா. போலீஸ் மந்திரியாகஎடப்பாடி உள்ள துறையில்தான் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறல் நடவடிக்கையில் டிஐஜி ஈடுபட்டதாக  குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுக்க சென்றவரை எஸ்பி தடுத்து நிறுத்தி மிரட்டல் விட்ட சம்பவத்தை நாடே அறியும்.  போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் சொல்வாரா?. 

ஆனால், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆதரவாக போராடிய மாதர் சங்கத்தினர் மீது வழக்கு போட்டதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணம் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். ஆகவே தமிழக மக்கள் அதிமுக, பாஜக கூட்டணியை ஓடஓட விரட்டியடிப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்நிலையில், இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாலையில் விழுந்து கால் முறிந்துவிட்டதாக அறிந்தோம். அவர் குணமாக வேண்டும். ஆனால், இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் போட்ட குண்டும் குழியுமான சாலையில்தான் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூன் விழுந்தார்என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும். அத்தகைய ஊழல் சாம்ராஜ்யம் நடத்தியவர்களை விரட்டியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக வாக்குகளை கேட்டு வ.ம.சண்முக சுந்தரம் பேசுகையில், பொதுவாழ்வில் நேர்மையுடன் இருப்பேன்  வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட உழைத்திடுவேன் என்கிற உறுதியை அளித்தார்.

;