election2021

img

சிறுதொழில் துறையினருக்கு மோடி காட்டிய கிளுகிளுப்பை பொம்மை....

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 30ஆம் தேதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு அக்கறை செலுத்துவதாகக் கூறி, இங்கு பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலை மற்றும் பொம்மை தயாரிக்கும் தொழிற்பேட்டை உருவாக்குவோம். தமிழகத்தில் 3.5 லட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி மத்திய அரசு  நிதி வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் இடைத்தரகர்களிடம் இருந்து சிறு விவசாயிகளை விடுவிக்கக்கூடிய விதத்தில் விவசாயத் துறை சீர்திருத்தத்தைத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.கடந்த 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்குமிக உற்சாகமாக ஆதரவு கொடுத்தவர்கள் கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை யினர்தான்! அவர் வந்தால் குஜராத் மாடல் வளர்ச்சியை ஏற்படுத்துவார், தொழில்கள் செழித்து வளரும் என்று பெரும் நம்பிக்கை வைத்தனர். ஆனால், 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அவர்திடீரென அதிரடியாக, ரூ.500, ரூ.1000 பணம் செல்லாதுஎன்று அறிவித்தது இந்த துறையினருக்கு பேரிடியாக விழுந்தது. அப்போது விழுந்த அடியில் பல நூறு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. அதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இன்றும் பல நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

அதற்குள்ளாக அடுத்த அடி விழுந்தது. 2017 ஜூலை 1ஆம் தேதி முதல் “ஒரே நாடு, ஒரே வரி!” என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி வரி விதிப்பு திணிக்கப்பட்டது. பல முனை வரியை நீக்கி ஒரே வரியை விதிப்பதால்பொருட்கள் விலை குறையும், உற்பத்தியாளர், தொழில்துறையினருக்கு சரியான லாபம் கிடைக்கும் என்று வழக்கம் போல பாஜகவினர் அள்ளிவிட்டனர். ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் மத்திய அரசு சூழ்ச்சி செய்தது. அதாவது கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களுக்கு 5 சதவிகிதம் என்ற அளவில் குறைந்தவரியும், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு  12 மற்றும் 18 சதவிகிதம் என கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பலத்த அடி வாங்கின. பண மதிப்பு நீக்கத்தின்போது கொஞ்ச, நஞ்ச தள்ளாட்டத்துடன் சமாளித்து மீண்டு விடலாம் என நினைத்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பின் இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கடைசியாக கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின்பொது முடக்கக் காலத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூன்றாவது முறையாக பேரிடியை சந்தித்தன.நிறுவனங்கள் மூடப்பட்டு, உற்பத்தி நடைபெறாதபோதும் வங்கிகளில் வட்டி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியான நிலையில் சிறு தொழில்துறையினருக்கு நிவாரணம், மீட்புத் திட்டம் அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மோடி அரசு அந்த நெருக்கடியை தீர்க்கநடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலையை அறிவித்தது. கடன் தள்ளுபடி கேட்டதற்கு வட்டியைக் கூட தள்ளுபடி செய்யவில்லை. வட்டியை செலுத்துவதற்கும் வேண்டா வெறுப்பாக சில மாதங்கள் கால அவகாசம் மட்டும் கொடுத்தனர். இப்போதும் அந்த நிறுவனங்கள் சிரமத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 

சமீபத்தில் மத்திய அரசு அந்த வட்டிக்கு அளித்த கால அவகாசத்தையும் முடித்துக் கொண்டது, அந்த வட்டித்தொகையை கடனாக கருதி கடந்த மார்ச் 31ஆம் தேதிக்குள்செலுத்த வேண்டும் என்று கழுத்தை நெரிக்கும் உத்தரவையும் பிறப்பித்தது. இதுதான் மத்திய மோடி அரசு சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையை காக்கும் லட்சணம். 

எனவே கதறிக் கொண்டிருக்கும் தொழில்துறை யினருக்கு கை தூக்கி விட உதவி செய்யாத மோடிஅரசு, தேர்தல் பிரச்சாரத்தில் வந்து நீட்டி முழங்குகிறார்.3.50 லட்சம் நிறுவனங்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறார். இதைப் பற்றிசிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரிடம் கேட்டால்அப்படியா, எங்கே ஒதுக்கியிருக்கிறார், மோடி? என்றுவியப்புடன் கேட்கின்றனர். இதுதான் சமயம் என பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலை மற்றும் பொம்மைகள்தயாரிக்கும் தொழிற்பேட்டை அமைக்கப் போகிறார்களாம்! அதையும் யாருக்கு கொடுக்கப் போகிறார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். பெரும்முதலீட்டில் அமைக்கப்படும் அந்த நிறுவனங்களில் நிச்சயம் பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்குத்தான் வாய்ப்பு அளிப்பார்கள். அதிலும் தனது ஆத்ம நண்பர்கள்அம்பானி, அதானியை மோடி மறந்துவிட மாட்டார் என்று இங்கிருக்கும் தொழில் துறையினர் வெறுப்புடன் கூறுகின்றனர். மோடி என்னதான் சொன்னாலும் அதை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை, தொழில் வர்த்தகம் நிறைந்த கொங்கு மண்டலத்தில் இந்த முறை பாஜக- அதிமுக கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றுசிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் தெரிவித்தனர். அவர்கள் “வச்சு செய்ய” காத்திருக்கின்றனர்!!

தொகுப்பாளர் : வே.தூயவன்

;