election2021

img

சட்டம்-ஒழுங்கு குறித்து பேச முதல்வர் பழனிசாமிக்கு அருகதை இல்லை... திருச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு....

திருச்சிராப்பள்ளி:
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மற்றும் கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் ஞாயிறன்று எடமலைப்பட்டிபுதூர் மற்றும் தாராநல்லூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.  அப்போது அவர் பேசியதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோல் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்து, அடித்து படுகொலை செய்தனர். வெற்றி நடைபோடும் தமிழகமே என்ற விளம்பரத்தில் இரவில்கூட பெண்களுக்கு போலீசார் பாதுகாப்பு உள்ளது என விளம்பரம் செய்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு மிரட்டப்படுகிறார். தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் கொடுமைகள் நடைபெற்றன. இதில் கைது செய்யப்பட்ட 6 பேரும் அதிமுகவினர். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எனவே சட்டம்-ஒழுங்கு பற்றிபேச தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. முதல்வர் பழனிசாமியை போலி விவசாயி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு கோபப்பட்டார். உண்மையான விவசாயி என்றால் மத்தியஅரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ஆதரிக்க முடியுமா? 

இந்த தேர்தல் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? மதச்சார்பின்மையா? வகுப்பு வாதமா? ஒற்றை ஆட்சியா? கூட்டாட்சியா? மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதா? பெரு நிறுவனங்களின் லாபத்திற்கானதா? தமிழ்நாட்டின் பண்பாட்டை பாதுகாப்பதா? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பாஜகவுடன் கூட்டணி சென்ற மாநில கட்சிகள் தங்களது ஆட்சியை பாஜகவிடம் இழந்து நிற்கும் நிலை உள்ளது. இதே நிலைதான் அதிமுகவிற்கும் ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பிரச்சாரத்தின்போது சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழுஉறுப்பினர் சம்பத், பகுதி செயலாளர் சிவகுமார், கார்த்திகேயன், வேலுச்சாமி, தர்மா மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள், திமுக முன்னாள் கவுன்சிலர் முத்துசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;