election2021

img

சிறுபான்மை மக்களின் விரோதி பாஜக....

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறையில் 90 சதவிகிதம் மோடி பிரதமராக இருந்த 7 ஆண்டு காலத்தில் நடந்தவை எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் எனச் சொல்லியும், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் சொல்லச் சொல்லியும், இஸ்லாமியர்களை இந்துத்துவ கும்பல்கள் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்வது என்பது இந்தியாவில் இன்றைக்கு வாடிக்கையான விஷயமாகி விட்டது.இஸ்லாமியர்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் ஜம்மு-காஷ்மீருக்கு ஒரே நாளில் சிறப்பு அந்தஸ்தையும், மாநிலஅந்தஸ்தையும் நீக்கி, அந்த தினத்தை (ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டிய தினமும் அதுவே) இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்த தினம் எனச் சொன்னவர்தான்  பாஜகவின் பிரதமர் மோடி.

‘அயோத்தியில் ராமர் கோவிலை மீட்க வேண்டும்’ என அப்பாவி இந்துக்களின் மனதில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை வளர்த்து, நாடு முழுவதும் பல்வேறு கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்த கட்சி பாஜக. 2002ல் மோடி ஆட்சியில் குஜராத்தில் நடத்திய கலவரங்களைப் போலவே இன்றைக்கு சங்பரிவாரங்கள் தலைநகரம் தில்லி உள்ளிட்ட பிற இடங்களில் மத்திய பாஜக அரசாங்கத்தின் துணையோடு கலவரங்களை நடத்துகின்றன. பாஜகவின் அமைச்சர்கள் உள்ளிட்ட மதவெறி பிடித்த தலைவர்கள் சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் பேசியதன் விளைவாகவே கிழக்கு தில்லியில் கலவரங்கள் வெடித்தன.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ”துப்பாக்கி குண்டுகளால் அவர்களிடம் பேசுங்கள்!” என்று மிரட்டினார். பாஜகவின் கபில்மிஸ்ரா இஸ்லாமியர்களை வெளிப்படையாக மிரட்டிய வீடியோக்கள் வெளிவந்த பிறகும், பாஜக தலைவர்கள் மீது கலவரங்களைத் தூண்டியதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி போலீஸ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; மாறாகக் கலவரத்தால் உயிர் மற்றும் உடைமைகளை இழந்தஇஸ்லாமியர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் ராமர் பெயரைச் சொல்லி கட்சியை வளர்க்கமுடியாது  என்று உணர்ந்த தமிழகபாஜகவினர் ‘வேல்யாத்திரை’ நடத்திப் பார்த்தார்கள்.

பாஜக மதக்கலவரங்களை உருவாக்குவதை  நோக்க மாகக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருந்தும், அதிமுக அரசு பாஜக வின் வேல் யாத்திரையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது.இந்து மதத்தில் புரையோடிப் போயிருக்கும் வர்ணாசிரம, சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, நாத்திகத்தைப் பரப்பிய பெரியாரையும், அவருடைய கொள்கையை ஆதரிக்கும் திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இயக்கங்களையும், இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சித்தரிக்க முயல்கிறது பாஜக. உண்மையில் தமிழ்நாட்டின்முற்போக்கு இயக்கங்கள் இந்துத்துவத்துக்கும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும், சனாதனத்துக்கும்  எதிரானவையே அன்றி இந்துக்களுக்கு எதிரானவை அல்ல என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

நர்மதா தேவி

;