election2021

img

சட்டமன்ற தேர்தல் துளிகள்....

14 பெண்கள் தானா?

அதிமுக மொத்தம் 177 இடங்களில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலையும் முழுமையாக வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா இருந்த போது கூடுதலான இடங்களில் பெண்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்துவந்தார். ஆனால் இப்போது மொத்தம் 14 பேர் மட்டுமே பெண்கள். அதிமுகவில் பெண்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் என்று கூறப்பட்டுவரும் வாய்ப்பந்தல் முடிவுக்கு வந்துவிட்டது போலும்.

                          **************

பொன்னேரியில் உள்ளது

அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராடவேண்டியுள்ளதால் திருவெற்றியூரில்  போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் சீமான் கூறியிருக்கிறார்.  அதானி துறைமுகம் திருவெற்றியூர் தொகுதியில் இல்லை. அதற்கு பக்கத்து தொகுதியான பொன்னேரியில் உள்ளது என்று சமூக ஊடகங்களில் கலாய்த்திருக்கிறார்கள் சிலர். 

                          **************

அதிமுக தொண்டர்கள் சபதம்

கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியிருக்கிறது அதிமுக தலைமை. முன்னதாக இந்த தொகுதியை அக்கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்று அத்தொகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது உணர்வுகளை அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால்  இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் யாராக இருந்தாலும் அவரை நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம் என்று அதிமுக தொண்டர்கள் சபதம் ஏற்றுள்ளனர்.

                          **************

என்னாச்சு வைபை வசதி?

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்”-கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அளித்த “பொது இடங்களில் ‘வைபை’ வசதி” என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஒரு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக மதுரையில் மூன்று இடங்களில் வைபை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்துத் தந்துள்ளேன் என, அதிமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட லட்சணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மதுரை மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன். 

                          **************

மம்தாவா? மீனாட்சியா?

மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஒரு இளம்பெண்ணை களத்தில் இறக்கியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மீனாட்சி முகர்ஜி.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்குவங்க மாநிலத் தலைவராக செயல்பட்டு வருகிறார். மம்தா அரசுக்கு எதிராக வங்கத்தில் வீரச்சமர் புரிந்துவரும் மாபெரும் இளைஞர் இயக்கத்தின் துடிப்புமிக்க தலைவரான மீனாட்சி, மம்தாவுக்கு எதிரான போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறார். வங்கத்து இளைஞர்களுக்கு பெருமை.

;