election2021

img

சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு...

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 6 சட்டமன்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இவர்களை சென்னையில் ஞாயிறன்று (மார்ச் 14)  கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்  ஈரோடு மாவட்டம் பவானி சாகர் தொகுதியில் பி.எல்.சுந்தரம், கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் எம்.ஆறுமுகம், சிவகங்கை தொகுதியில் எஸ்.குணசேகரன், கிருஷ்ணகிரி மாவட்டம்தளி தொகுதியில் ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி(எ) எம்சுப்பிரமணியன் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

வேட்பாளர்கள்  வாழ்க்கை குறிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியின் வேட்பாளராக க.மாரிமுத்து வயது 49) வணிகவியல் இளங்கலைப்பட்டபடிப்பு பயின்றவர். சிபிஐயில் 1994ல் உறுப்பின ராக இணைந்தவர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், கோட்டூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்துவருகிறார். மனைவி ஜெயசுதா. தளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாநிலக்குழு உறுப்பினர் டி.ராமச்சந்திரன் (வயது 52). பிஎஸ்சி(சிசிபி)பட்டதாரி. 2007 ஆம் ஆண்டிலிருந்து  சிபிஐயில் உறுப்பினராக உள்ளார். மனைவி கல்பனா. பவானிசாகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் (வயது 53). 9ஆம் வகுப்பு வரை பயின்றவர்.   1989ல் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். 2006-2011 மாநில நிர்வாகக்குழு உறுப்பினர். 2011-16 சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். மனைவிபி.கே.லதா. திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ரவி (என்கிற) எம்.சுப்பிரமணியன் (வயது 69). எஸ்எஸ்எல்சி வரை பயின்றவர்.  1976ல்கட்சியில் இணைந்த இவர் மாநில நிர்வாகக்குழு உறுப்பினராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவரு கிறார். மனைவி எஸ்.கஸ்தூரி. 

வால்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.ஆறுமுகம் (வயது69). எஸ்எஸ்எல்சி வரை பயின்றவர்.50 ஆண்டுகால தொழிற்சங்கப் பணியில் அனுபவம் கொண்டவர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின
ராக இருந்தவர்.  மனைவி ஜீவானந்தம்.சிவகங்கை தொகுதி வேட்பாளர் எஸ்.குணசேகரன், சட்டமன்ற  முன்னாள் உறுப்பினராகவும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர்.மகத்தான வெற்றியை நோக்கி வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதாகவும் அகில இந்திய அளவில் கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜா, ஏஐடியுசிபொதுச்செயலாளர் அமர்ஜித்கவுர், தேசிய செயலாளர் டி.நாராயணன், மூத்தத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்ட பலர் பிரச்சா ரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.

அறிமுகப்படுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
 

;