election2021

img

தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்... சென்னையில் பிரகாஷ் காரத் பேச்சு...

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல் என்றும் பாஜகவுடன் சேர்த்து அதிமுகவையும் தமிழக மக்கள் தோற்கடிக்கவேண்டும் என்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து திங்களன்று (மார்ச் 29) எழுகிணறு பகுதியில்  நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே  அவர் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் முக்கியமான தேர்தல் ஆகும். தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய மிக முக்கியமான தேர்தலுமாகும்.  நானும் கிட்டத்தட்ட  50 ஆண்டு காலமாகப் பொதுவாழ்வில் இருக்கிறேன். எனது அரசியல் வாழ்வும் தமிழகத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக 1967 -70 களில் மாணவராக இருந்த காலம். 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக திமுக ஆட்சிக்கு வந்தது, அது தமிழுக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட அரசாகும். ஆனால் தற்போது மாநிலத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி சுயமாகச் செயல்படக்கூடிய சுயமாகச் சிந்திக்கக்கூடிய ஆட்சி அல்ல. இது ஒரு அடிமை ஆட்சி. இந்த ஆட்சியை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக மோடியும் அமித்ஷாவும் இயக்கி வருகிறார்கள். இந்த அடிமை ஆட்சி நமக்குத்தேவையில்லை. வரும் சட்டப்பேர வைத் தேர்தலில் இந்த அரசைத் தூக்கியெறியவேண்டும்.

அதிமுக மட்டுமே ஆதரித்தது
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிமுக அரசும் அதிமுகவும் எப்படிச் செயல்பட்டது? நாடாளுமன்றத்தில் மோடி அரசு  விவசாயிகளுக்கு எதிரான3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இதை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால்அதிமுக மட்டும் ஆதரித்து வாக்களித்தது.   3 வேளாண் சட்டங்களை எதிர்த்து  இன்றளவும் விவசாயிகள் தில்லியில் போராடிக்கொண்டிருக் கிறார்கள்.  அதிமுக அரசு மத்திய மோடி அரசின் அனைத்து மக்கள் விரோத கொள்கைகளுக்கும் ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  அதேபோல் தொழிலாளர்களுக்கு எதிரான4 தொழிலாளர் நலச் சட்ட தொகுப்புகளை பாஜக அரசு  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.  இதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தபோதும் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுக மட்டும் அதை ஆதரித்தது.  

அதேபோல் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்காமல் ஜால்ரா போடும் அரசாக அதிமுக அரசு உள்ளது.  மதச்சார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம்நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இந்த சட்டத்தை  அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா, ராஜஸ்தான்,பஞ்சாப், சத்திஸ்கர்  மாநில அரசுகள்அறிவித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு  மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கக்கூடிய இந்த  சட்டத்தை எதிர்க்காமல் ஆதரித்துக் கொண்டிருக்கிறது.

பாஜகவின் முகமூடியான அதிமுக
மத்தியில் உள்ள அரசு, பாஜக தலைமை தாங்கும் அரசு அல்ல.  ரிமோட் கண்ட்ரோல் மூலமாக ஆர்.எஸ்.எஸ்தான் அந்த அரசை இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ் பாசிச சிந்தனையை அடிப்படையாகக்  கொண்டுள்ள அமைப்பாகும். இந்து ராஷ்டிரத்தை இந்தியாவில் அமைக்க அது முயற்சிக்கிறது. சிறுபான்மை மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது. பாஜக ஆட்சிசெய்யக்கூடிய பல மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.  மாட்டிறைச்சிக்குத் தடை, லவ் ஜிகாத் தடை என்ற பெயரில்மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக் கிறார்கள். எனவே பாஜக அரசின் பிளவுவாத கொள்கைகள் தமிழக  மக்களின்ஒற்றுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்த லாகும்.

தமிழகத்தில் பாஜக நேரடியாக வரவில்லை.  அதிமுக என்ற முகமூடியைபோட்டுக்கொண்டு வலம் வருகிறது. பாஜக தனது மக்கள் விரோத கொள்கைகளைத் தமிழகத்தில் அதிமுக மூலமாக நிறைவேற்றி வருகிறது.  பாஜக என்பதுஇந்தி மொழி, சமஸ்கிருத மொழியைத் தமிழக மக்கள் மீது திணிக்க முயற்சிக்கும் கட்சியாகும். உயர்சாதி சனாதன கொள்கைகளைத் தமிழகத்தில்  திணிக்க முயற்சிக்கிறது. இதுதமிழகத்தின் சமூக கலாச்சார பாரம்பரியத்திற்கு எதிரானதாகும்.

துறைமுகம் மக்களுக்குநல்ல வாய்ப்பு 
50 ஆண்டுக்கால திராவிட கலாச்சாரம், திராவிட பாரம்பரியம் ஊறியுள்ள தமிழக மண்ணில் இதை நாம் அனுமதிக்கமாட்டோம். பாஜக நேரடியாக வந்தாலும் அதிமுக  மேல் சவாரிசெய்து வந்தாலும் அதை நாம் தமிழகத்தில் ஒரு போதும் அனுமதிக்கமாட் டோம். சென்னை துறைமுகம் தொகுதியில் நேரடியாக பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்த தொகுதி மக்களுக்கு பாஜகவை டெபாசிட் இழக்கச்செய்ய  நல்லவாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேகர்பாபுவை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வதன் மூலமாக அந்த பணியைச் செய்து முடிக்கமுடியும். இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.பிரகாஷ் காரத் உரையை சிஐடியு தலைவர்களில் ஒருவரான நரேந்திரன் தமிழில் மொழிபெயர்த்தார். இந்த கூட்டத்தில்  கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (சிபிஎம்), பா.கருணாநிதி (சிபிஐ), செல்லதுரை (வி.சி.க), சிவ.ராஜசேகரன் (காங்கிரஸ்), சு.ஜீவன் (மதிமுக), தா.கா.நவின் (தமுமுக), காதர் ஷா (இ.யூ.மு.லீக்), முகமது (இ.தே.லீக்), பிஷ்மில்லாஹ் கான் (எம்.ஜே.கே) ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.வி.கிருஷ்ணன் வரவேற்றார். பகுதி செயலாளர் எம்.ஜலாலூதீன் நன்றிகூறினார்.

பத்திரிகையாளர்என்.ராம் பங்கேற்பு
பின்னர் பிரகாஷ்காரத் துறைமுகம் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து திமுகவேட்பாளர் சேகர்பாபுவை  ஆதரித்து வாக்கு சேகரித்தார். திமுகதேர்தல் அறிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கி ஆதரவு திரட்டினார். அப்போது முத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம்உடனிருந்தார்.

;