election2021

img

தமிழகத்தைப்போல நாடுமுழுவதும் மதச்சார்பற்ற அணி உருவாக்கப்பட வேண்டும்.... இரா.முத்தரசன் பேச்சு.....

கந்தர்வகோட்டை:
தமிழகத்தை போல நாடு முழுவதும் ஒருங்கிணைந்த அளவில் மதச்சார்பற்ற அணி உருவாக்கப்பட வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரையை ஆதரித்து கந்தர்வகோட்டையில் வியாழக்கிழமையன்று அவர் பேசியதாவது:

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை  வீசுகிறது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளது. தமிழக மக்களால் வெறுக்கப்படும் மோடி பிரச்சாரத்திற்கு வந்தால் அது எங்கள் அணிக்கு ஆதரவாகவே மாறும். 

130 கோடி மக்களைக் கொண்ட பிரதமர் பொய் பேசுகிறார் என சொல்ல சங்கடமாகத்தான் உள்ளது. ஆனாலும், செல்லும் இடங்களில் எல்லாம் அவர் பொய்தான் பேசுகிறார். தனித்துவமாக செயல்படவேண்டிய அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகிய  அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவையாக மாறி விட்டன. பழனியில் பஞ்சாமிர்த தயாரிப்பு நிறுவனம் பாஜகவினருக்கு நிதி கொடுக்க மறுத்த மறுநாளே அங்கு அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. மற்றவர்களை அடக்கி ஒடுக்கி, ஒரே நாடு, ஒரே கட்சி என கொண்டு வரத் துடிக்கும் பாஜகவுக்கு எடப்பாடி துணை போகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் கூறியது போல, தமிழகத்தைப் போன்று நாடு முழுவதும் மதச்சார்பற்ற அணி உருவாகவேண்டும்;அதன் மூலம் பாஜகவை முற்றாக விரட்டியடிக்க முடியும். 

கந்தர்வ கோட்டைத் தொகுதியில் போட்டியிடும் சின்னத்துரை எளிய, விவசாயக் கூலித் தொழிலாளி வீட்டுப்பிள்ளை, ஓட்டு வீட்டில் வசிப்பவர். அவர் வெற்றி பெறுவது ஜனநாயகத்தின் வெற்றி. ஒன்றிணைந்து போராடி வெற்றிபெறுவோம். 
இவ்வாறு அவர் பேசினார்.  பிரச்சாரத்தின் போது வேட்பாளர் எம்.சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதைப்பித்தன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திமுக ஒன்றியச் செயலாளர் பரமசிவம், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராமையா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் த.செங்கோடன், ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் உ.அரசப்பன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;