election2021

img

பாஜக கொடியை தூக்க மறுக்கும் அதிமுக தொண்டர்கள்....

விருதுநகர்:
இந்தியா முழுவதும் ஒற்றை ஆட்சி கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இதைத் தெரியாமல்  அதிமுகவினர்  பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகர் தொகுதியில்  திமுக சார்பில்போட்டியிடும் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது,

தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக  தொண்டர்கள்,  பாஜக கொடியை  தூக்க மாட்டோம் என உறுதியாக உள்ளனர். இதனால், பாஜக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளனர். தில்லியில் இருந்து  ஓபிஎஸ், இபிஎஸ்-சிடம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அதற்குள் தேர்தல் முடிந்து விடும். 20 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைவது உறுதி.தலைநகர் தில்லியில் நான்கரை மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அங்கே 200-க்கும் மேற்பட்ட  விவசாயிகள் செத்து விட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாத பிரதர் மோடி, தமிழகத்திற்கு வந்து, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்“ என திருக்குறள் பேசுகிறார்.

“பெற்ற தாயிடம் இருந்து குழந்தையை பிரிப்பதை போல“ நிலத்திலிருந்து விவசாயிகளை பிரிக்க 3 சட்டங்களை மோடி இயற்றியுள்ளார். நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்து அதானி, அம்பானியிடம் தாரைவார்க்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்க முடிவு எடுத்துள்ளனர். விமான நிலையம், இன்சூரன்ஸ், ரயில்வே ஆகியவற்றை தனியார் மயமாக்கி முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மின்சாரம் தனியாரிடம் போய்விடும். மகளிருக்கு மாதம் ரூ.1500 தருவேன் என அறிவித்துள்ளார். ஏன் அதை முன்பே செய்யவில்லை? 6 சிலிண்டர் இலவசம் என்கிறார்.10 வருடங்கள் ஆட்சியில் இருந்த போது ஏன் வழங்கவில்லை? வாசிங் மெசின் இலவசம் என்கிறார். போகிற போக்கை பார்த்தால் வீட்டுக்கு ஒரு இமயமலை வழங்கப்படும் எனக்கூட வாக்குறுதி தருவார்.

எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதினால், மத்திய அமைச்சர் பதில் கடிதத்தை  இந்தியில் அனுப்புகிறார். நீதிமன்றம் போன பின்பு, ஆங்கிலத்தில் பதில் தருகின்றனர். இந்தி வெறியர்களாக மத்திய ஆட்சியாளர்கள் உள்ளனர்.மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூறுகின்றனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கவில்லையென பட்ஜெட்டில் நிதி அமைச்சரே கூறுகிறார். 11 மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி என்கின்றனர். அதற்கு மத்திய அரசு நிதி வழங்கியதா? இல்லை. பணம் முழுவதும் மாநில அரசின் பணமாகும்.இந்தத்  தேர்தலை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ், தமிழகத்தில் விதை போட முயற்சித்து வருகிறது. அந்த விதையில் நாம் வெந்நீர் ஊற்றிசாகடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு நகர் செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு வரவேற்றார். துவக்கி வைத்து தமுஎகச மாவட்டத் தலைவர் தேனிவசந்தன் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிபிஐ நிர்வாகிகள் சீனிவாசன், சக்கணன், மதிமுக நகர் செயலாளர் ராமர், திமுக நகர் செயலாளர் எஸ்.தனபாலன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.  தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு நன்றி கூறினார்.

படக்குறிப்பு : விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனை ஆதரித்து சிபிஎம் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் பேசினார். இராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் பேசினார்.

;