election2021

img

விவசாயிகளை, சந்தைகளை ஒழிக்க மோடிக்குத் துணைபோகும் அதிமுக.... டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு....

திருப்பரங்குன்றம்:
சிறு-குறு விவசாயிகளை, வியாபாரி களை தமிழகம் உட்பட இந்தியா முழுவதும்ஒழித்துக்கட்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதே புதிய வேளாண் சட்டம். இந்தச் சட்டத்தினால் விவசாயிகளுக்கு விலை கிடைக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.

திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சி களின் ஆதரவுடன் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாயை ஆதரித்து நாகமலைப்புதுக்கோட்டையில் அவர் பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் பகுதியில் ஒரு ஏக்கரில் 50 நெல் மூடைகள் கிடைப்பதாக வைத்துக்கொண்டால். இந்த விளைச்சல் போதுமானதல்ல ஏக்கருக்கு 70 முதல் 100 மூடை வரை அறுவடைசெய்ய வேண்டும் என்பது பாஜக-வின் திட்டம். இதைப் பார்த்தால் நல்ல யோசனையாகத் தோன்றும். ஆனால், இதில் ஆபத்து உள்ளது. விளைச்சலை அதிகரிப்பதற்கான நெல் விதைகளை அதானியும், அம்பானியும் வழங்குவார்கள். நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மருந்தையும் இவர்களே தருவார்கள். விளைச்சலையும் இவர்களே அறுவடை செய்துகொள்வார்கள். ஆனால், விவசாயிக்கு உரிய விலை தரமாட்டார்கள். வர்த்தகச் சந்தையில் இவர்கள் தீர்மானிப்பதுதான் விலை. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வர் என அதிமுக கூறுகிறது. ஆனால், பாஜக-வோ தேர்தல் முடிவு வெளியான பிறகு யார் முதல்வர் என்பதை தீர்மானிக்கலாம் என்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்பதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

பல மாநிலங்களில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பிற்கு வருவதில்லை. வெற்றி பெறுபவர்களை விலை கொடுத்து வாங்குவதுதான் அவர்கள் வேலை. அந்த வேலையை அதிமுக-மூலம் தமிழகத்தில் முடித்துக்கொள்ள நினைக்கின்றனர். தமிழகத்தில் பாஜக-காலுன்ற அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

;