election2021

img

தமிழகத்திற்கு மட்டுமல்ல, தேசத்திற்கே துரோகம் இழைத்த கட்சி அதிமுக....

கந்தர்வகோட்டை:
மோடி அரசு கொண்டுவந்த சட்டங்கள் அனைத்தையும் ஆதரித்ததன் மூலம் அஇஅதிமுக தமிழகத்திற்கு மட்டும் துரோகம்இழைத்திடவில்லை, நாடு முழுவதற்கும் துரோகம் இழைத்திருக்கிறது. இவ்வாறு துரோகமிழைத்த அஇஅதிமுக-பாஜககூட்டணியை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து,  தமிழக மக்கள் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேட்டுக் கொண்டார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கந்தர்வக்கோட்டைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு வாக்கு கேட்டு,தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கந்தர்வக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்புரையாற்றும்போது, சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:நாட்டு மக்களின் சார்பாக ஒரு முக்கியமான வேண்டுகோளை உங்கள் முன் வைப்பதற்காக இங்கே உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். இந்திய மக்கள், தமிழக வாக்காளர்களாகிய உங்களிடம் மிகவும்முக்கியமாக ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்களாகிய நீங்கள் உங்களுடைய வாக்குச்சீட்டின் மூலம் இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும், இந்தியஅரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும், இந்தியாவின் மதச்சார்பின்மை மாண்புகளைப் பாதுகாக்க வேண்டும், இந்தியாவின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவற்றை நிறைவேற்றுவதற்கு நீங்கள் உங்கள் வாக்குச்சீட்டுகளின்மூலம் பாஜக-அஇஅதிமுக கூட்டணியை முற்றிலுமாகத் தோற்கடித்திட வேண்டும். தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர்த்தப்பட வேண்டும்.இன்றைக்கு நாட்டின் குடியரசின் அனைத்து மாண்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் ஒவ்வொரு உரிமையும் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த 370ஆவதுபிரிவு ரத்து, மற்றும் பல்வேறு அம்சங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் சுயேச்சை அமைப்புகளான நாடாளுமன்றம், அமலாக்கத் துறை,உச்சநீதிமன்றம் என எந்த அமைப்பாக இருந்தாலும் அவை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்தகைய பின்னணியில்தான் தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் தாங்கள் அளித்திடும் வாக்குகள் மூலம் இவற்றுக்குக் காரணமான பாஜக-வையும் அதற்குசரணாகதி அடைந்துள்ள அதிமுக-வையும் தூக்கி எறிவதன் மூலம் இந்தியாவிற்கே ஒருமுன் மாதிரியாக விளங்க வேண்டும். திமுகதலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

120 நாளாக... 
நாட்டின் தலைநகரில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 120 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக? மோடி அரசாங்கம், விவசாயத்தை அழிக்கும் விதத்தில், விவசாயிகளைஅழிக்கும் விதத்தில் கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டங்கள் அமலானால் உணவுப் பாதுகாப்பு அழிக்கப்படும். பசி-பட்டினிச் சாவு ஏற்படும். பொது விநியோக முறை ஒழிக்கப்பட்டுவிடும். இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்றுதான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 300க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் தியாகிகளாகி இருக்கிறார்கள். ஆனாலும் போராடும் விவசாயிகளுடன் மோடி அரசாங்கம் பேச மறுக்கிறது.  
100 நாள் வேலை எங்கே?
ஐமுகூ ஆட்சிக் காலத்தில் திமுக, இடதுசாரிக் கட்சிகள் ஆதரவுடன் மகாத்மா காந்திதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தின் கீழ் ஆண்டிற்குக் குறைந்தபட்சம்100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. மோடி அரசாங்கம் இதனை இப்போது அழிப்பதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் இதன்கீழ் இப்போது 42 நாட்கள்தான் வேலை கிடைக்கிறது. இந்தச் சட்டத்தையும் ஒழித்திட மோடிஅரசு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.

கூட்டுக்களவாணிகளின் ஆட்சி
நாடாளுமன்றத்தில் மோடி சுய சார்பு என்று (self-reliance) சொன்னார். இதைஅவர் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்? செல்ஃப் என்றால் ‘தான்’ என்று புரிந்துகொண்டார். ‘ரிலையன்ஸ்’ என்றால் அம்பானி. இவ்வாறு நாட்டிலுள்ள சொத்துக்கள் அனைத்தும் தனக்கும், தன்னைச் சேர்ந்த கூட்டுக் களவாணிகளுக்கும்தான் சொந்தம் என்ற முறையில் மோடி அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.கொரோனா வைரஸ் தொற்று காலத்தில்சுமார் 15 கோடிப் பேர் வேலை இழந்தார்கள். நூறு நாள் வேலைதிட்டத்திலும் கூட மக்களுக்கு வேலை அளிக்கப்படவில்லை. சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில் மோடியின் கூட்டுக்களவாணிகளோ உலகப்பணக்காரர்கள் வரிசைக்கு முன்னேறியிருக்கிறார்கள்.நாட்டின் பிரதமர் என்பவர் யார்? நாட்டின் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? நாட்டின் செல்வங்கள் நாட்டு மக்களுக்குச் சொந்தம். பிரதமர் என்பவர் அவற்றை மேற்பார்வை செய்திடும் மேலாளர் என்பவர்மட்டுமே. அவருக்கு நாட்டின் செல்வங்களைச் சூறையாடுவதற்கு, அனுமதி கிடையாது. ஆனால் பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருக்கிறார்? நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார். நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், எண்ணெய் நிறுவனங்களையும், ஏர் இந்தியாவையும், வங்கிகளையும், கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் தனியாரிடம் தாரை வார்த்திடத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றைத் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய மோடி அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டங்களுக்கும், அஇஅதிமுக ஆதரவு அளித்துள்ளது. இதன்மூலம் அஇஅதிமுக, தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்கும் துரோகம் இழைத்துள்ளது. எனவேதான் தமிழக மக்களாகிய நீங்கள், மிகவும் மோசமான பாஜக-அஇஅதிமுக கூட்டணியை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக்கு  ஆதரவு அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கந்தர்வக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரைக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.(ந.நி.)

                                            **************

மு.க.ஸ்டாலின் சிறந்த வாக்குறுதிகளை அளித்துள்ளார்

இந்திய அரசியலில் முக்கிய தலைவராக தன் வாழ்நாளில் பெரும் பங்கு பணியாற்றி மறைந்த திமுக தலைவர் கலைஞர். கருணாநிதியை இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். அவர் நமக்கெல்லாம் கற்று கொடுத்தது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் மனிதர்களாக சமமாக பார்க்க வேண்டும் என்பதுதான். ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள அரசியல் தலைவராக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் அவர் இந்த ஊரின் சிறப்புக்கு முக்கியமானவர். அதேபோல ஆன்மீக சிந்தனையும் மேலோங்கியுள்ள இந்த ஊரில் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்றதாகும். இப்படிப்பட்ட திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் வெற்றிபெறுவதும் தமிழகத்தின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதும் இந்திய அரசியலில் ஒரு புதிய செய்தியை கொடுக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் சிறந்த வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்துள்ளார். அதில் முக்கியமானது நீர்ப் பாசன திட்டங்களை மேம்படுத்துவதாகும். இது மிகவும் அவசியமானது. மேலும் தமிழக மக்களின் வாழ்க்கை நிலையில்  முன்னேற்றம் ஏற்படுத்திட சாத்தியமான திட்டங்களை தேர்தல் அறிக்கையாக தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு : கீழ்வேளூரில் சிபிஎம் வேட்பாளர் நாகைமாலியை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றிய காட்சி

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்க்ளின் தமிழக பிரச்சார செய்தி தொகுப்பு 1 மற்றும் 3-ஆம் பக்கம் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் ஒரே தொகுப்பாக உள்ளது.   

;