election2021

img

அதிமுக கூட்டணி ‘வாஷ் அவுட்’ ஆகப்போவது உறுதி... திருவாரூரில் பிரச்சாரத்தை துவக்கினார் மு.க.ஸ்டாலின்....

நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போதும், இந்த திருவாரூரில் இருந்து என்னுடைய பரப்புரையைத் தொடங்கினேன். இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கும், முதன் முதலாக இந்த திருவாரூரிலிருந்து தான் பரப்புரையைத் தொடங்கியிருக் கிறேன்.

எவ்வாறு, நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்களோ, அதேபோல இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.200 என்று ஒரு மாதத்திற்கு முன்னர் சொன்னேன். அது இப்போது அல்ல! இப்போது நான்சுற்றி வரும் பயணத்தில் உணரக்கூடிய உணர்வுஎன்ன என்று கேட்டால், இந்த நாடே எண்ணிக் கொண்டிருப்பது என்ன என்று கேட்டால் - ‘இந்து’ ராம் அவர்களே தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். தி.மு.க. 234-க்கு 234இடங்களில் வெற்றி பெறப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணி ‘வாஷ் அவுட்’ – அதுதான் தமிழக மக்களின் நிலையாக இன்று இருக்கிறது.

10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டைப் பாழடித்துவிட்டார்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்.ஊழல் வழக்கின் காரணமாக அவர் தண்டிக்கப்பட்டு, அவரது பதவியை ராஜினாமாசெய்தார்.இடையில் பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். எனவே வழக்குப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த காரணத்தால் ஆட்சியை ஒழுங்காக நடத்தவில்லை. அதற்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பைஏற்று 1 ஆண்டு காலத்திற்குள் அவர் உடல் நலிவுற்று அவர் மறைந்துவிட்டார்.அவர் மறைந்த பிறகு 4 ஆண்டு காலமாக - இடையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இருந்தார் - அதனைத் தொடர்ந்து பழனிசாமி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று எந்த அளவிற்கு சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடு நன்றாக அறியும்.ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞரும் – மு.க.ஸ்டாலினும் தான் என்று எடப்பாடிபழனிசாமி சொல்லி வருகிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 10 ஆண்டுகாலத்தில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர் உடல்நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட துப்பற்றஆட்சியைத்தான் இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

நான் தொடர்ந்து பல நேரங்களில் குறிப்பிட்டுகாட்டி இருக்கிறேன். இப்போது நமது தேர்தல்அறிக்கையிலும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கையை நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகுஎடுப்போம் என்று உறுதிமொழி தந்திருக் கிறோம்.பழனிச்சாமி அவர்கள் இப்படி சொல்லி இருக்கிறார். இந்த 4 ஆண்டு காலம் நீங்கள்தான்ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ஸ்டாலின் தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா?

எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாமா? நாக்கில் உங்களுக்கு நரம்பு இல்லையா? கலைஞர்தான் காரணம் என்று வாய்கூசாமல் பேசுகிறீர்களே எப்படி? அதுதான் எனக்கும் புரியவில்லை.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது; நீதி வேண்டும்; விசாரணை கமிஷன்அமைக்க வேண்டும் என்று சொன்னது யார்? ஓ.பி.எஸ்.அதற்குப் பிறகு அவரைச் சமாதானம் செய்து துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து, பெயரளவிற்கு விசாரணை கமிஷன்; ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷன் 4 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையில் என்ன நிலைமை என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஏழெட்டு முறை விசாரணை கமிஷனுக்கு வாருங்கள் என்று ஓ.பி.எஸ்.க்கு அழைப்பு சென்றிருக்கிறது. இதுவரையில் அவர் செல்லவில்லை.

எனவே இதை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு ஆத்திரத்தின் காரணமாக கலைஞர் தான் காரணம் - ஸ்டாலின் தான் காரணம் என்று திசைதிருப்புவதற்கு முயற்சிக்கிறார் பழனிசாமி. அதை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியிலிருந்து - கடைக்கோடியில் இருக்கும் மந்திரிகள்வரை என்னென்ன ஊழல்கள் செய்திருக் கிறார்கள்? எங்கெங்கு கமிஷன் வாங்கியிருக் கிறார்கள்? எந்தெந்த வகையில் அவர்கள் கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் பொத்தாம் பொதுவாக அல்ல, வாய்க்கு வந்தபடி அல்ல, நினைத்ததை அல்ல,முழு ஆதாரங்களோடு அத்தனையும் ஒன்றுதிரட்டி தமிழகத்தின் ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.

ஏற்கனவே சில பிரச்சனைகள் நீதிமன்றத்தில் இருக்கிறது. அத்தனையும் ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். அதில் ஒன்றை மட்டும் நான் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், பழனிசாமியின் பொறுப்பி லிருக்கும் நெடுஞ்சாலைத்துறை. அந்த நெடுஞ்சாலைத்துறையில் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர்விடப்பட்டிருக் கிறது. யாருக்கு என்றால் அவருடைய சம்பந்தி -சம்பந்தியின் சம்பந்திக்கு.எனவே அதில் முறைகேடு நடந்திருக்கிறது - ஊழல் நடந்திருக்கிறது என்று ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு சென்று நம்முடைய வழக்கறிஞர் - அமைப்புச் செயலாளர் - மாநிலங்களவை உறுப்பினர் பாரதி அவர்கள் அந்த வழக்கைப் போட்டார்.சென்னை உயர்நீதிமன்றம் அதை முழுமையாக விசாரித்து, அதில் முகாந்திரம் இருக்கிறது. இதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை முழுமையாக வெளியே வரும். சுதந்திரமாக இதை விசாரிக்க முடியும். எனவே இதை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

எனவே சி.பி.ஐ. விசாரித்தால் உண்மைவெளிப்பட்டு விடும் என்று பயந்து - அஞ்சி - நடுங்கி முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி உச்சநீதிமன்றம் சென்று அதற்கு தடை வாங்கி விட்டார். தெம்பு இருந்தால் - தைரியம்இருந்தால் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி, அந்த வழக்கை நான் சந்திக்க தயார் என்று சொல்லி இருக்க வேண்டும்.சி.பி.ஐ. விசாரணை நடக்க தொடங்கியிருந்தால், அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ராஜினாமா செய்வதுமட்டுமல்ல, சிறைக்குள் இருந்து இருக்க வேண்டும். அதுதான் உண்மையான நிலை. எனவே நீங்கள் முதலமைச்சராக இருக்கும் காரணத்தால் தப்பித்துக் கொண்டிருக்கலாமே தவிர, ஸ்டாலின் முதலமைச்சராக ஆனதற்கு பிறகு நீங்கள் தப்பிக்க முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கைவெளியிடப்பட்டிருக்கிறது. நாம் சொன்னதையே நகலாக காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. அறிக்கையை தி.மு.க. அறிக்கை என்று கூடப் போட்டுவிடுவார்கள். அந்த அளவிற்கு நாம் என்ன சொன்னோமோ அதை அப்படியே நகல் எடுத்துப் போட்டிருக்கிறார்கள். 

மகளிருக்கு உரிமத் தொகை ரூ.1000 என்று அறிவித்தோம். அதை ரூ.1500 என்று அறிவித்துள்ளார்கள். முதியோருக்கு உதவித் தொகை 1,500 என்று அறிவித்தோம். 2,000 என்று அறிவித்துவிட்டார்கள். மாணவர்களுக்குக் கல்விக் கடன் தள்ளுபடி என்று அறிவித்திருந்தோம். அதையே இப்போது அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னோம். இது புதிதாகச் சொன்னதல்ல.முதலமைச்சராக நீங்கள் நான்கு வருடங்
களாக இருந்து இருக்கிறீர்கள் அல்லவா? அப்போது ஏன் இதையெல்லாம் அறிவிக்கும் எண்ணம் வரவில்லை? அப்போது ஏன் சிந்திக்கவில்லை; அந்த உணர்வு வரவில்லை? விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு சட்ட மன்றத்தில் பலமுறை கேட்டோம். அப்போது நிதியில்லை என்று கூறிவிட்டார்கள்.

விவசாயப் பெருங்குடி மக்கள், அவர்களது அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். உயர்நீதிமன்றம் கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை கேட்ட பிறகாவதுஅதை செய்தார்களா? இல்லை. உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கினார்கள். கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது - நிதிஇல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் சென்றுதடை வாங்கிவிட்டு இப்போது அறிவிக் கிறார்கள். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிந்து பின்னர் அணையுமே அதைப் போலக் கடைசி நேரத்தில் அறிவிக்கிறார்கள்.

ஏனென்றால் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரப்போவதில்லை, அதனால் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகலாம் அல்லவா?இந்த பழனிசாமி ஆட்சி, கொரோனா காலத்தில், சாலை ஓரங்களில் போடப்படும் பிளீச்சிங் பவுடரில் கூட கொள்ளை அடித்தது. மாஸ்க் வாங்கியதில் கொள்ளை அடித்து விட்டார்கள். துடைப்பம் வாங்கியதில் கூட கொள்ளை!திராவிட முன்னேற்றக் கழக அணி 234 இடங்களில் மாபெரும் வெற்றியை அடையப் போகிறது. அந்த வெற்றியின் காரணமாக நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்க இருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 100 நாட்களில்அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கப் போகிறோம். ஒருவேளை யாருடைய பிரச்சனையாவது தீர்க்கப்படாமல் இருந்தால், அந்த அடையாள அட்டை இருந்தால் போதும். நேராகக் கோட்டைக்குள் வரலாம். யாருடைய அனுமதியும் தேவையில்லை. கோட்டைக்குள் மட்டுமல்ல முதலமைச்சர் அறைக்குள் வருவதற்கான தகுதி அந்த அட்டைக்கு இருக்கிறது. இதனைத் தெளிவாக நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
நமது தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதம் ரூபாய் 1000. பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைவு. டீசல் லிட்டருக்கு ரூபாய்4 குறைவு. சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைவு. பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைவு. மகளிருக்கான செலவை குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அது உருவான போதே 5,000 ரூபாய்கொடுங்கள் என்று சொன்னேன். நிதி இல்லைஎன்று சொன்னார்கள். வெறும் 1,000 ரூபாய்கொடுத்தார்கள். இப்போது நான் சொல்கிறேன். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் 4,000ரூபாய் ரேஷன் அட்டை இருக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.அதேபோல, நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும். கரும்பிற்கு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும். வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் போடப்படும். 100 நாள் வேலைத்திட்டம் என்பது 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடிசெய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.எனவே இவை எல்லாம் உறுதியாக செய்யப்படும் - நிறைவேற்றப்படும்.வெற்றிவிழா நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்க ஒரு நல்வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தர வேண்டும்.

திருவாரூரில் மார்ச் 15 திங்களன்று மாலை நடைபெற்ற மாபெரும் பிரச்சார துவக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து.....  
 

;