election2021

img

சவூதிஅரேபியாவில் சிக்கியுள்ள 25 இந்தியர்களை மீட்க உதவுமாறு குடும்பத்தலைவி மனு....

கோவில்பட்டி:
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 25 இந்தியர்களுடன் தனது கணவரை மீட்க உதவுமாறு குடும்பத் தலைவி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். செவ்வாயன்று (மார்ச் 23)  கோவில்பட்டி அருகில் உள்ள தீத்தாம்பட்டியில் சிபிஎம் வேட்பாளர்  கே. சீனிவாசன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் வாக்குசேகரித்தார். 

அப்போது கையில்தனது 3 வயது குழந்தையுடன் வந்த மகேஸ்வரி ஒருமனுவை சீனிவாசனிடம் கொடுத்தார். அதில், தனது கணவர் ஜே.வில்சன்சிங் ஒரு வருடம் சவூதிஅரேபியாவில் வேலை பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த 8.5.2020 அன்று இந்தியா திரும்ப அங்குள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்துள்ளார். இவ்வாறு விண்ணப்பித்த 400 பேர் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால் வில்சன்சிங்கின் பாஸ்போர்ட் அவர் வேலை செய்து வந்தநிறுவனத்திடம் சிக்கியதால் மாற்று பாஸ்போர்ட் பெற தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார். கடந்த 14.10.2020 அன்று அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு  அனுப்புவதற்காக சவூதி அரசு விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.ஆனால் வில்சன்சிங் உட்பட 25 பேரது கைரேகை பொருந்தவில்லை என்று கூறி மறுபடியும் இந்திய தூதரக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனது கணவரை அங்கிருந்து அழைத்து வர உதவுமாறு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.அப்போது உதவுவதாக கூறியசீனிவாசன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி,சு.வெங்கடேசன்மூலம்உரிய நடவடிக்கை எடுக்கலாம் என பதிலளித்து ஆறுதல் கூறினார்.

;