election2021

img

இடது ஜனநாயக முன்னணி பிரச்சாரம் பேரெழுச்சியுடன் நிறைவு...

கண்ணூர்:
“கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணியை இரண்டாவது முறையாக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி நடந்த மாநிலங்களை எல்லாம் வெள்ளித்தட்டில் வைத்து பாஜகவுக்கு விட்டுக் கொடுத்ததை கேரள மக்கள்நன்கு அறிந்துள்ளதால் சரியான முடிவை அவர்கள் எடுப்பார்கள்; அதேபோல பாஜகவுக்கு கடந்தமுறை கொடுத்த ஒற்றைத் தொகுதியையும் கூட இம்முறை கேரள மக்கள்கொடுக்கமாட்டார்கள் என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மார்ச் 17 அன்று வயநாட்டில் துவங்கி மாநிலம் முழுவதும் 14 மாவட்டங்களிலும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பினராயி விஜயன், இறுதியாக தனதுசொந்தத் தொகுதியான தர்மடம் அமைந்துள்ள கண்ணூர் மாவட்டத் திற்கு வருகை தந்தார். இங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:“கேரளா என்பது சிதைந்துபோனமாநிலம் எனும் தோற்றத்தைக் கட்டமைக்க பிரதமர் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த தேசியத் தலைவர் களும், காங்கிரஸ் தலைவர்களும் முயன்றனர். கேரளாவில் நிர்வாகம் என்பதே இல்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.கடந்த 5 ஆண்டுகளாக கேரளமாநிலத்தின் வளர்ச்சியைச் சிதைக்கவும், தங்களை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ளும் வகையிலும் யாரெல்லாம் பேசினார்களோ, அவர்கள்தான் இன்று மாநிலத்தின் வளர்ச்சி பற்றிப் பேசுகின்றனர். இதைப் பார்க்கும் கேரள மக்கள் நிச்சயம் அவர்களை எள்ளி நகையாடவேசெய்வார்கள்.

கேரள மாநிலத்தை, தொடர்ந்து மோசமாகச் சித்தரிப்பது சங்-பரிவாரங்களின் பெரு விருப்பமாகும். இந்த மாநிலம் சங்பரிவாரங்களின் வகுப்புவாத திட்டங்களுக்குச் சரண்அடையவில்லை என்பதால், கேரள மக்களை பழிவாங்க வேண்டும்- தண்டிக்க வேண்டும் என்பது சங்-பரிவாரங்களின் சதித்திட்டமாகும்.கேரளாவில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற மத்தியப் படைகள் வந்து உதவின. அரிசி ஒதுக்கீடுவழங்கப்பட்டது. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் பின்னாளில் மத் திய அரசு கட்டணம் வசூலித்தது.எங்களின் சொந்த ராணுவமான மீனவர்கள், எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் சேவை செய்தார் கள். ஒரு பைசா கூட அரசிடம் இருந்துவாங்கவில்லை. கேரள அரசு அவர்களுக்குப் பணம் வழங்கியபோதிலும் மீனவர்கள் மறுத்து விட்டார்கள்.

கேரளாவில் 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வந்திருந்தபோது, கேரளாவில் பழங்குடி மக்களிடையே பச்சிளங் குழந்தை உயிரிழப்பு சோமாலியாவை விடமோசமாக இருக்கிறது என்று வேதனைதெரிவித்தார். உண்மையில், இந்தியாவிலேயே பச்சிளங் குழந்தைகள் இறப்பு, தற்போது குறைவாக இருப்பது கேரளாவில்தான்.மாநிலத்தில் பாஜக-வும், காங்கிரசும் இரட்டை சகோதரர்கள் போல ஒரேகுரலில் இடது ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்கின்றனர். ஆனால் இதனைக் கேரள மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் இந்த கட்சிகளுக்கு தகுந்தபாடத்தைப் புகட்டுவார்கள்.

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சியை வெள்ளித்தட்டில் வைத்து பாஜக-விடம் வழங்கியிருக்கிறது. அதேபோல கேரள மாநிலத்தை பாஜக-விடம் வழங்க காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், இந்தத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.அதேபோல, கேரள மாநிலத்தில் பாஜக வளரவே முடியாது. கேரளம் அதற்கான மண் அல்ல!. சங்- பரிவார் அமைப்புகளுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான - தொடர்ச்சியான எதிர்ப்பும், கேரள மக்களின் மதச்சார்பற்ற மனநிலையும் பாஜகவுக்குஎன்றுமே தடையாக இருக்கும்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் நேமம் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் அந்த ஒற்றை இடத்தைக்கூட இடதுசாரிகள் பாஜகவுக்கு விட்டுவிட மாட்டார்கள். இந்த தேர்தலில் ஒருஇடத்திலும் பாஜக வெற்றி பெறாது.அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும்அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதத்திலும் வீழ்ச்சி ஏற்படும்.

காங்கிரஸ், பாஜக கட்சிகளை முறியடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மீண்டும் கேரளத்தில் ஆட்சியமைக்கும். கேரளமக்கள் தொடர்ந்து இரண்டாவதுமுறையாக இடது ஜனநாயக முன்னணியைத் தேர்ந்தெடுப்பார்கள்.இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.

;