election2021

img

இடுக்கி தேர்தல் ஸ்பெஷல்.... தேவிகுளத்து ராஜா....

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி இடதுஜனநாயக முன்னணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் ஏ. ராஜா போட்டியிடுகிறார்.

தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் ஒன்றான  தேவிகுளம் தொகுதி இடதுஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதிகளில் ஒன்றாகும்.

தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தோழர். ராஜா தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவருடைய தாத்தா இளம்வயதில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரிலிருந்து இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் தோட்டத் தொழிலாளியாக புலம் பெயர்ந்து குடியேறியவர் ஆவார்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக, “இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் கேரள அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்பது போன்ற பிரமையை ஏற்படுத்துவதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்த சில எதிர் அரசியல் சக்திகளும் ஊடகங்களும் தொடர்ந்து, சிறு சிறு பிரச்சனைகளைக் கூட திரித்து பெரிதாக்கி, அவதூறு  செய்ய முயன்று வருகிறார்கள். ஆனால் உண்மை முற்றிலும் வேறுபட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆளும் இடதுஜனநாயக முன்னணி, இடுக்கி மாவட்டத்தில் பள்ளிகளில், தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதோடு, கல்லூரிகளில் தமிழ்த்துறைகளின் சிறப்பான செயல்பாடுகளை உத்தரவாதம் செய்துள்ளது.அதுபோன்று தமிழ் மக்களின் பண்பாட்டைப் போற்றிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க உத்தரவாதம் செய்து, அவர்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ இடதுஜனநாயக முன்னணி அரசு கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது.
பினராயி அரசின் லைஃப் திட்டத்தின் மூலம் வீடற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது.

கடந்த காலங்களில் பெரும்பாலும் ஏழை தமிழ் வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்து காணப்படும் தேவிகுளம் தொகுதியில் இடதுமுன்னணி, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களையே தேர்தலில் போட்டியிடவைத்து வெற்றிபெறச் செய்துள்ளது.தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான இராஜேந்திரனின் கடந்தகால செயல்பாடுகள் இடது ஜனநாயக முன்னணிக்கு மிகுந்த நம்பிக்கையளிப்பவையாகும்.

2 முறைக்கு மேல் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்களை விடுவித்து இளம் தோழர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் வாலிபர் சங்க இடுக்கி மாவட்டப் பொருளாளரும், கேரள மாநிலக்குழு உறுப்பினருமான ராஜா இடதுஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூணார் பகுதிக்குழு உறுப்பினர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளிலும் செயல்படுகிறார். 
கோவை அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை  சட்டம் பயின்ற அவர், கட்சி வழக்கறிஞராகவும், 2018 ம் வருடம் முதல் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றிவருகிறார்...  சில மாதங்களுக்கு முன்பு  மூணார் பெட்டிமுடி பகுதியில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான தொழிலாளர் குடும்பங்கள் பலியான சம்பவத்தின் போது, மண் குவியலில் சிக்கி உரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ராஜா தலைமையில் வாலிபர் சங்கத் தோழர்களின் செயல்பாடு பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற ஒன்றாகும். 

எளிய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து சிறந்த அரசியல் ஆளுமையாக, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணிப் போராளியாக களத்தில் போராடி வந்த ராஜாவின் குரல், தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் சட்டமன்றத்தில் மக்களின் நலனுக்காக  ஒலிக்கட்டும்.

சதன், தக்கலை

;