election2021

img

லவ் ஜிகாத் மூலம் அதிகம் ஆதாயம் அடைந்தது இந்து மதமே..... அரசாங்கப் புள்ளிவிவரங்கள் மூலம் அம்பலமான பாஜக-வின் மோசடிப் பிரச்சாரம்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தஉத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத்,ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராக சட்டம் கொண்டு வர எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை என்று பேசியிருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் ‘லவ் ஜிகாத்’துக்குஎதிராக சட்டம் நிறைவேற்றப்படும் போது கேரளத்தில் ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என்று கேள்வியெழுப்பினார். இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய இரண்டு அணிகளுமே வாக்குவங்கி அரசியல் நடத்தி வருவதாகவும் கூறிக்கொண்டார்.‘லவ் ஜிகாத்’, பெரும்பான்மை இந்து வாக்குகளை அறுவடை செய்வதற்காக, பாஜகவால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை என்பதை அனைவரும் அறிவார்கள். சிறுபான்மையினர்- குறிப்பாக இஸ்லாமியர்கள்,

இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்து-திருமணம் மூலம் மதமாற்றம் செய்கிறார்கள்;இதனால் கண்ணுக்குத் தெரியாத வகையில்இந்து சமுதாயம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது என்பது பாஜக-வினரின் திட்டமிட்ட பிரச்சாரம் ஆகும். 
அதையே கேரளத்தில் ஆதித்யநாத் மீண்டும் வாந்தியெடுத்திருந்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உத்தரப்பிரதேசத்தைப் போலவே கேரளத்திலும் ‘லவ் ஜிகாத்’தைத் தடுக்க சட்டம் கொண்டு வருவோம் என்று கூறினார்.இந்நிலையில், அரசாங்கப் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில், எம்.எஸ். வித்யானந்தனின் செய்திக்கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘லவ் ஜிகாத்’ என்ற ஆதித்யநாத்தின் பூச்சாண்டி எவ்வளவு மோசடியானது என்பது ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல், கேரளத்தில் இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பிற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்ற- இதுவரை அதிகம் பேசப்படாத உண்மை ஒன்றும் வெளியாகியுள்ளது.2020-ஆம் ஆண்டில், கேரளத்தில் 506 பேர் தங்களின் மதமாற்றத்தை அரசாங்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதன்படி144 பேர் இஸ்லாம் மதத்திற்கும், 119 பேர் கிறிஸ்தவ மதத்திற்கும் மாறியிருக்கின்றனர் என்றால், இஸ்லாம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக- அதாவது 241 பேர், கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திலிருந்து இந்துமதத்திற்கு மாறியிருக்கின்றனர். இது ஒட்டுமொத்த மதமாற்றத்தில் 47 சதவிகிதம் என்றுதெரியவந்துள்ளது.இவ்வாறு இந்து மதத்தில் இணைந்தவர்களில் 32 பேர், இஸ்லாம் மதத்திலிருந்து மாறி வந்தவர்கள். புதிதாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் 119 பேர்கள் என்றால், கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது. 242 பேர் கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறி இந்து, இஸ்லாம் மதங்களைத் தழுவியுள்ளனர்.

இஸ்லாத்தை எடுத்துக் கொண்டால், 144 பேர் புதிதாக அந்த மதத்திற்கு மாறியுள்ளனர் என்றால், 40 பேர் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறி, பிற மதங்களுக்குச் சென்றுள்ளனர்.இந்து மதத்திலிருந்து 2 பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இவ்வாறு எந்த வகையில் பார்த்தாலும், 2020-ஆம் ஆண்டில் கேரளத்தில் மதமாற்றம் மூலம் அதிகபட்ச ஆதாயம் அடைந்த மதமாகஇந்து மதமே இருந்துள்ளது. அரசாங்க விதிப்படி, சிறுபான்மையினர் தங்கள் மதத்தை அதிகாரப்பூர்வமாக மாற்றும்போது, அதனை அரசிதழில் விளம்பரம் செய்ய வேண்டும். எனவே, இந்துமதத்திற்கு மாறியவர்களின் எண்ணிக்கையில் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப் பில்லை.

அதற்கேற்பவே, 2020-ஆம் ஆண்டில் பிற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்களில் 72 சதவிகிதம் பேர் தலித் கிறிஸ்தவர்கள் (கிறிஸ்தவ சேரமர்கள், கிறிஸ்தவ சம்பாக்கள் மற்றும் கிறிஸ்தவ புலையர்கள்) என்பதும் தெரியவந்துள்ளது. தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகைகள் இல்லாததால் பலர், வேறு வழியே இல்லாமல் இந்து மதத்தை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 28 சதவிகிதம் பேர் இஸ்லாம்உள்ளிட்ட மதங்களிலிருந்து வந்துள்ளனர்.இஸ்லாமிற்கு மாறிய 144 பேர்களில் 77 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும் இந்து ஈவா, தியா மற்றும் நாயர் சமூகங்களிலிருந்தே சென்றுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக பெண்கள் 63 சதவிகிதம், ஆண்கள் 37 சதவிகிதமாக உள்ளனர்.கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்குச் சென்ற 33 நபர்களில் 9 பேர் சிரியன் கத்தோலிக்கர்கள். இவர்களில் இரண்டு பேர் பெண்கள். இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்திற்கு சென்றவர்களில் 13 பெண்கள். 12 பேர் ஆண்கள்.

;