election2021

img

102 வயதில் தோழர் கவுரியம்மா அஞ்சல் வாக்கை பதிவுசெய்தார்... ‘வெற்றி, இடது ஜனநாயக முன்னணிக்கே!’ என வாழ்த்து...

ஆலப்புழா:
கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 2 கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 268 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இதனிடையே, வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க முடியாத தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ராணுவப் பணியில் உள்ள வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு மார்ச் 26 அன்றும்,80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்,மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக் கான அஞ்சல் வாக்குப்பதிவு மார்ச் 31 அன்றும் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வயோதிகம் காரணமாக வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாத 102 வயது தலைவர்- தோழர் கே.ஆர். கவுரியம்மா, வெள்ளிக்கிழமையன்று தனது அஞ்சல் வாக்கை செலுத்தினார்.கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உன்னதத் தலைவர்களில் ஒருவரான தோழர் கே.ஆர்.கவுரியம்மா, கம்யூனிஸ்டுகள் வாக்குச்சீட்டு மூலம் முதன்முதலில் அதிகாரத்திற்கு வந்த மாநிலமான கேரளத்தில்- அமைச்சராக பதவியேற்ற முதல்பெண்மணி ஆவார். முதுபெரும் தலைவர்இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலானஅமைச்சரவையில், ‘உழுபவனுக்கே நிலம்சொந்தம்’ என்ற முழக்கத்தின் அடிப்படையில், வரலாற்றுச் சிறப்புமிக்க நிலச்சீர் திருத்த மசோதாவை சட்டப்பேரவைத் தாக்கல் செய்தவரும் இவர்தான். 

இத்தகைய பெருமைகளுக்கு உரிய தோழர் கவுரியம்மா, வெள்ளியன்று கேரளத்தின் 15-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் தனது அஞ்சல் வாக்கை செலுத்தியதுடன், இந்த தேர்தலிலும், வெற்றி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணிக்கே! என்று முழங்கியுள்ளார். அஞ்சல் வாக்கு செலுத்திய அவரை பத்திரிகையாளர்கள் சந்தித்தபோது, ‘உரப்பானு எல்.டி.எப்’ என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

;