election2021

img

ட்விட்டரில் வருத்தம் தெரிவிக்கும்  பிரதமர் மோடி அசாம் வெள்ளத்தின்போது வருத்தம் தெரிவித்தாரா? பிரியங்கா காந்தி கேள்வி.....

கவுகாத்தி:
அசாமில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு சென்று அங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை பிரதமர் மோடி எப்போதாவது சந்தித்தது உண்டா? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகாகூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன.  தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜோர்ஹட் பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஞாயிறன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, அசாமில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு பிரதமர் மோடி எப்போதாவது சென்றுள்ளாரா? அங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை அவர் எப்போதாவது சந்தித்துள்ளாரா? தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளம் 350 ரூபாய் கொடுக்கப்படும் என முந்தைய தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் வலியை பிரதமர் மோடி உணரவில்லையா? 

நாங்கள் மிகவும் வலிமையாக போராடுவோம், எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. வளர்ச்சி, அசாம் மக்களின் தேவைகள், அவர்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், வலிமைபடுத்தவும் நாங்கள் தேவையான முயற்சிகளை எடுப்போம்’ என்றார்.

;