election2021

img

அசாம் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சிஏஏ? பாஜகவின் வகுப்புவாதமா... மகா கூட்டணியின் வளர்ச்சி முழக்கமா?

கவுகாத்தி:
அசாம் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அசாம் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  ஏப்ரல் 1 அன்று இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனிடையே, முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக-தான் கைப்பற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பாஜக-வின் வாக்குச் சாவடி முகவர்கள் கொடுத்த தகவலை வைத்தே அவர் இவ்வாறு கூறியதாக தகவல்கள் வெளியாகின. அதுபோலவே, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் நிறைய தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக பாஜக நம்புகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல், வங்காள இந்துக்களின் வாக்கு வங்கி கணிசமாக உள்ள பரக் பள்ளத்தாக்கை உள்ளடக்கிய தொகுதிகளில் நடைபெறுவதே இதற்குக் காரணம். பரக் பள்ளத்தாக்கில் மட்டும் 15 தொகுதிகள் வருகின்றன. 2016 தேர்தலிலும் பரக் பள்ளத்தாக்கில் எட்டு தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. கலாச்சார ரீதியாக அசாம் மொழி பேசும் மக்களைக் காட்டிலும் பரக் பள்ளத்தாக்கை சேர்ந்த மக்கள் வேறுபட்டவர்களாக இருப்பதும் மற்றொரு காரணம்.

காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்கள் வாக்குவங்கி நிறைந்த இதர பகுதிகளில் ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவைப் பொறுத்தவரை, சிஏஏ சட்டத்துக்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகளே முடிவை தீர்மானிக்கும் நிலை இருப்பதாக கருதப்படுகிறது.அதற்கேற்ப காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, 5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றையும் வாக்குறுதிகளாக அவர் அளித்துள்ளார். இவையும் தேர்தல் களத்தில் முடிவுகளை மாற்றும் என்று கணிக்கப்படுகிறது.

;