election2021

img

இடதுசாரிக்கட்சிகள் - காங்கிரஸ் இணைந்த ஐக்கிய முன்னணி ஓர் உண்மையான மாற்று...

மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், ஐக்கிய முன்னணியைஆதரிக்கிறார்கள். காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என்கிற பாஜக-வும், எதிர்க்கட்சிகள் இல்லாத வங்கம் வேண்டும் என்கிற திரிணாமுல் காங்கிரசும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்தார். தி இந்து நாளிதழில் வெளியாகி இருக்கும் அவருடைய நேர்காணலின் சாராம்சம் வருமாறு:

கேள்வி: மேற்கு வங்கத்தில் தேர்தல் பாதிக்கும் மேல் முடிவடைந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

அதிர் ரஞ்சன் சௌத்ரி: மேற்கு வங்கத்தில்,மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்காக ஒரு மதவெறிப் பிரச்சாரத்தை இப்போதுபாஜக மேற்கொண்டதுபோல் இதற்குமுன்னெப்போதும் நாம் பார்த்ததில்லை. மறு பக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரசின்அடாவடித்தனங்களால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தார்கள். இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால், மாநிலத்தில் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் இப்போது மக்கள் முன்பு தாங்கள் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருக்கிறது.  மேற்கு வங்கத்தில் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பிரிக்கமுடியாத விதத்தில் அதன் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். எங்கள் கூட்டணி அதனைபிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கைஉள்ளவர்கள், மாநிலத்தை மதவெறியர்களிடமிருந்து மாநிலத்தைப் பாதுகாக்க விரும்புகிறவர்கள், எங்களுடைய ஐக்கிய முன்னணி(Samyukta Morcha)யில் இணைந்திருக்கிறார்கள். ஐக்கிய முன்னணி குறித்து ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தபோதிலும், இதற்கு மக்களின்மகத்தான ஆதரவு இருப்பதை பிரிகேட் பேரேடில்நடைபெற்ற பேரணியே மாபெரும் எடுத்துக்காட்டாகும். பேரணியை சீர்குலைத்திட திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் பல்வேறுவிதங்களில் முயன்றபோதிலும் அவை அனைத்தையும் முறியடித்து, பேரணி மாபெரும் வெற்றி பெற்றது.  

                                 ****************

கேள்வி: திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் மிகவும் உக்கிரமாக பிரச்சாரம் செய்து வருகிறதே?

அதிர் ரஞ்சன் சௌத்ரி: நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மேற்கு வங்கத்திற்குத் திரும்ப திரும்ப வந்துகொண்டிருப்பதிலிருந்து இது ஓர் அதீதமான தேர்தலாக இருப்பதைக் காண முடியும். இருவருமே மிகவும் முக்கிய வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நபர்கள். எனினும் அவர்கள் மேற்கு வங்கத்திற்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வங்கத்தின் தேர்தல் அவர்களுடைய மிகப்பெரியநிகழ்ச்சிநிரலாக மாறி இருக்கிறது. சத்தீஸ்கரில்மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் 22 ராணுவவீரர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நபர்கள் இங்கே வந்து தெருமுனைக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  பாஜக-விற்கு எதிராக திரிணாமுல் காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பாஜக-வும் சேறை வாரி இறைத்தபோதிலும், மக்களின் உண்மையான பிரச்சனைகளை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

                                 ****************

ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்

கேள்வி: நீங்கள், மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தின் கழுத்தை திரிணாமுல் காங்கிரஸ் நெரித்ததாகக் கூறுகிறீர்கள். எந்த அர்த்தத்தில் நீங்கள் இதனைக் கூறுகிறீர்கள்?

அதிர் ரஞ்சன் சௌத்ரி: மேற்கு வங்கத்தில் வாழ்கிற எவராக இருந்தாலும் அவர்களுக்கு இது பற்றி நன்கு  தெரியும். மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 2018இல் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைபெற்றபோது நடந்த சம்பவங்களே மிகச்சரியான எடுத்துக்காட்டாகும். ஆளும் கட்சியானது, தேர்தலில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் அனுமதி அளிக்கவில்லை. அநேகமாக20 ஆயிரம் இடங்களில் இவ்வாறு எதிர்க்கட்சியினர் போட்டி போட முடியவில்லை. பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைபெற்ற அன்று, 80 முதல் 100 பேர் வரை தங்கள் உயிரை இழந்தார்கள். பாஜக, காங்கிரஸ் இல்லாத பாரதத்தை விரும்புகிறது.  திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் இல்லாதவங்கத்தை விரும்புகிறது. இவ்விரு கட்சிகளுக்குமே ஒரே குறிக்கோள்தான். அதனால்தான் திரிணாமுல் காங்கிரசும், பாஜக-வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று நாங்கள் கூறுகிறோம்.

முதலில் திரிணாமுல் இப்போது பாஜக

கேள்வி: இந்தத் தேர்தலில் கட்சித் தாவல்கள்என்பது மிக முக்கியமான ஒரு பிரச்சனையாக மாறியிருக்கிறதே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அதிர் ரஞ்சன் சௌத்ரி: 2011 வரையிலும்மேற்கு வங்கத்தின் அரசியலில் கட்சித் தாவல் இடம் பெற்றதே இல்லை. கட்சித் தாவல் அரசியலைத் துவக்கி வைத்தது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான். அது ஆட்சிக்கு வந்தவுடனேயே எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை வேட்டையாடும் முயற்சிகளில் ஈடுபட்டது. 2016இல்கூட 44 எம்எல்ஏ-க்கள் வெற்றி  பெற்றபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தாவல் நடவடிக்கைகளைத் தொடங்கியது. 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதாயம் அளிக்கப்படுவதாகத் தூண்டப்பட்டோ அல்லது அரசு எந்திரத்தால் மிரட்டப்பட்டோ பின்னர் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.  உள்ளாட்சி அமைப்புகளிலும் இத்தகைய கட்சித்தாவல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால்எதிர்க்கட்சிகள் அவற்றின் மீதான கட்டுப்பாடுகளை இழந்தன. இப்போது இதேபோன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறது. எனவேதான் இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறுகிறோம்.

                                 ****************

வங்க மக்கள் புத்திசாலிகள்

கேள்வி: காங்கிரஸ் கட்சி முன்பும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்தது. எனினும் விரும்பிய ளவிற்கு வெற்றியை ஈட்டவில்லை. இப்போது எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?

அதிர் ரஞ்சன் சௌத்ரி: முந்தைய கூட்டணிகள் அரைவேக்காட்டுத் தன்மையுடனும், அரைமனதுடனும் மேற்கொள்ளப்பட்டவை. 2016இல்கூட, வாக்கு வித்தியாசம் என்பது 30 லட்சம்மட்டுமே. இதன் பொருள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாங்கள் 46 வாக்குகள் கூடப் பெற்றிருந்தோமானால், நாங்கள் வென்றிருப்போம் என்பதேயாகும்.  இந்தத் தடவை நன்கு விவாதங்கள் மேற்கொண்டு, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே கூட்டணியை அமைத்துவிட்டோம். ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின்அடிப்படையின்கீழ் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்.  அந்தத் திட்டத்தின்அடிப்படையில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறோம். இடதுசாரிக் கட்சிகளுடன் இந்தியமதச்சார்பற்ற கூட்டணியையும் இணைத்துக்கொண்டிருக்கிறோம். வாக்காளர்களிடம் எங்கள் செய்தி மிகவும் தெளிவானது: மக்கள், மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தின் அஸ்திவாரமாக விளங்கும்  ஜனநாயகத்திற்கும் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் பிரிவினைவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்குஎதிராக வாக்களிக்க வேண்டும் என்பதேயாகும். மேற்கு வங்க மக்கள், எங்களுக்கும், அவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்குப் புத்திசாலிகளாவார்கள்.

நேர்காணல் : அதிர் ரஞ்சன் சௌத்ரி

நன்றி: தி இந்து, 10.4.2021, 

தமிழில்: ச.வீரமணி
 

;