election-2019

img

மோடி அரசை தோற்கடித்தால்தான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்

திருப்பூர், ஏப். 5 -


நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசைத் தோற்கடித்தால்தான் நம் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்று சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் வெள்ளியன்று மாலை நாடாளுமன்றத் தேர்தலில் நமது கடமை என்றதலைப்பில் சிறப்புப் பேரவைக் கூட்டம் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.பாலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஏ.கே.பத்மநாபன் கூறியதாவது: இந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் அடுத்து தேர்தல் என்பதே நடக்காது என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் வெளிப்படையாக கூறுகிறார். அவர் கூறுவதற்கு முன்பாகவே சிஐடியு இதைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிமீண்டும் வெற்றி பெறுமானால் நாட்டில் ஜனநாயக அரசியல் அமைப்பு முறையே இருக்காது. இப்போது இருக்கும் அரசியல் அமைப்பு குறைபாடானதாக இருந்தால் கூட நாம் இதை பாஜகவிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.



கடந்த ஐந்து ஆண்டு கால பாரதியஜனதா ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சிறுதொழில் நடத்துவோர் என சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்ததை அனுபவப்பூர்வமாகப் பார்த்தோம். குஜராத் மாடல் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி சிறு, குறு தொழில்களை கடும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டது.வேலைவாய்ப்பு வேண்டும் என்றால் திருப்பூருக்கு போகலாம் என்ற நிலை மாறிவிட்டது. இங்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலை இழப்புஏற்பட்டுள்ளது. திருப்பூரில் என்ன நிலையோ இதேதான் ஹைதராபாத்திலும், காசியாபாத்திலும், குர்கானிலும் என நாடு முழுவதும் பல்வேறு தொழில் நகரங்களிலும் உள்ளது. வேலை இழப்பு கடுமையாக உள்ளது. வேலை வாய்ப்பு பற்றி தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் தயாரித்த புள்ளி விபரங்கள் வெளியிடப்படவே இல்லை. அதை வெளியிடுவதற்கு முன்பே மூடி மறைத்துவிட்டது பாரதிய ஜனதா அரசு.இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதியஜனதா அரசைத் தோற்கடிக்க வேண்டியது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மிகவும் அவசியமாகும். இந்த வரலாற்றுக் கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்ற வேண்டும் என ஏ.கே.பத்மநாபன் கூறினார்.இந்த பேரவையில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

;