economics

img

“செபி” போலீசும், டிமிக்கி திருடர்களும்....

கேள்வி: எல்.ஐ.சி போன்ற நிறுவனங்கள் பங்கு விற்பனைக்கு ஆளாகி, செபி போன்ற நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் வரும் போது அவற்றின் மீதான கண்காணிப்பு வலுப்படும் என்று ஓர் வாதம் முன் வைக்கப்படுகிறதே!

பதில் : எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு ஆளாகும் போது“செபி” (SEBI- Securities Exchange of India) வளையத்திற்குள் வரும்; ஆகையால் அதன் செயல்பாடுகள் மீதானகண்காணிப்பு பலப்படுமென்பது ஆட்சியாளர்களின்வாதம். ப.சிதம்பரம் போன்றவர்கள் எல்.ஐ.சியின் பங்குவிற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பொதுவாக பொதுத் துறை பங்கு விற்பனையை முன் வைக்கும் போது இதே வாதத்தை முன் வைக்கிறார்கள். 

கண்காணிப்பு பலப்பட வேண்டுமென்பது நோக்கமா?பங்கு விற்பனைக்கு நியாயம் தேட இந்த வாதம் முன்வைக்கப்படுகிறதா? உண்மையில் ‘செபி’யால் கண்காணிப்பை வலுப் பெறச் செய்ய இயல்கிறதா? என்பதெல்லாம் கேள்விகள். கண்காணிப்பு வளையம் என்பதெல்லாம் எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு ஹர்ஷத் மேத்தாவில் துவங்கி நீரவ் மோடி வரை நிறைய உதாரணங்கள் உண்டு.அவையெல்லாம் பழைய படங்கள் போரடிக்கிறது என்றால் ஒரு புதுப் படம் வந்திருக்கிறது பாருங்கள். படத்தின் டைட்டில் “லக்சம் பர்க்”.

வாமனதேசம்
லக்சம்பர்க் (Luxembourg) மேற்கு ஐரோப்பியாவில் உள்ள சின்னஞ்சிறு நாடு. ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம்போன்ற பெரிய நாடுகளால் சூழப்பட்ட குட்டி தேசம். மக்கள்தொகை 2011 சென்சஸ்படி 5,12,000.  அதாவது நம்ம ஈரோடு மக்கள் தொகைதான். பண்ருட்டி, விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் சேர்ந்தாலே “லக்சம்பர்க்” மக்கள் தொகையை மிஞ்சி விடும். அங்குள்ள மக்கள் “லில்லி புட்” உருவத்தினர் அல்ல; ஆனால் தேசமே “லில்லிபுட்” மாதிரி சிறியது. இவ்வளவு காட்சிகள் லக்சம்பர்க் பற்றி ஏன் இங்கே என்றால் அங்குதான் ஒரு டிவிஸ்ட் இந்த படத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அந்நிய முதலீடுகளை அதிகம் கொண்டு வருகிற நாடுகளின் பட்டியல்தான் அது. “இந்து பிசினஸ் லைன்”- 16.02.2021 நாளிதழின் தலைப்பு செய்தியாக ஓர் காட்சி இடம் பெறுகிறது. 

இந்தியாவுக்கு அந்நிய முதலீடு அதிகம் கொண்டு வரும் நாடுகள் என்றால் நம் மனதில் என்ன ஓடும்? அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என்றுதானே ஓடும். ஆனால் பதிவு செய்யப்பட்ட அந்நிய முதலீட்டாளர் எண்ணிக்கை பட்டியலில் அமெரிக்கா எதிர்பார்த்தபடி முதல் இடத்தில் இருக்கிறது. பிரிட்டன் 6 வது இடத்திலும், ஜப்பான் 8 வது இடத்திலும் இருக்கிறது. இதிலெல்லாம் ஆச்சரியம் இல்லை. கதாநாயகர் இப்போதுதான் சீனுக்கு வருகிறார். இவ்வளவு பெரிய நாடுகள் இருக்கும் போது, இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் “ லக்சம்பர்க்” இருக்கிறது என்பதுதான். 

பதிவு செய்ய்யப்பட்டுள்ள அந்நிய முதலீட்டாளர்கள்

1 அமெரிக்கா - 3309

2 லக்சம்பர்க் -   1143

3 கனடா          -     662

4 அயர்லாந்து-     617

5 மொரீசியஸ் -    608

6 பிரிட்டன்       -     499

7 சிங்கப்பூர்     -     434

8 ஜப்பான்        -     421

2012 ல் இப்படி பதிவு செய்த அந்நய முதலீட்டாளர்கள் லக்சம்பர்க்கில் 125 பேர் இருந்தார்கள். 2020 ல் இந்த எண்ணிக்கை பத்து மடங்கு அதிகமாகியுள்ளது. மொத்தம்பதிவான பங்குச் சந்தை அந்நிய முதலீட்டாளர்களில் லக்சம்பர்க் வழி வருபவர்கள் 9.25% ஆகும். அந்நிய முதலீட்டு தொகை என்று பார்த்தாலும் அமெரிக்கா (ரூ. 8,27,258 கோடி), மொரீசியஸ் (ரூ. 2,83,487 கோடி) ஆகியவற்றுக்கு அடுத்தபடி லக்சம்பர்க் (ரூ. 2,30,479 கோடி) உள்ளது. இவையெல்லாம் “செபி” 
தரும் தகவல்களே. 

லக்சம்பர்க் வசதி
சின்னஞ்சிறு நாடு தன் பரப்பளவு, மக்கள் தொகை,பொருளாதார பலம் ஆகியவற்றுக்கு சற்றும் சம்பந்தமில்லாத அளவிற்கு அந்நிய முதலீடுகளை எப்படிகொண்டு வர இயலும்? அதில்தான் இப் படத்தின் உயிரே அடங்கியிருக்கிறது. அங்கிருந்து வருகிற முதலீடுகளெல்லாம் அந்த நாட்டினரால் செய்யப்படுவதல்ல. அங்கு செய்யப்படுவதால் கிடைக்கும் முகமூடிக்காக அதன் வழி செய்யப்படுகிறது என்பதே உண்மை. இதோ “இன்கவர்ன்” (InGovern) என்ற நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்ரீராம் சுப்ரமணியன் கூறுவது,“லக்சம்பர்க் போன்ற நாடுகள் ‘ரகசியத்தைப்’ பாதுகாக்கின்றன. இம் முதலீட்டு வாகனங்கள் இறுதியாய் யாருக்கு பயன்களைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றன என்று எளிதாய்க்  கண்டு பிடிக்க இயலாது. இந்தியத் தொழில் முனைவோர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் லக்சம்பர்க் வழியைப் பயன்படுத்தக் கூடும். பண மோசடி, (Money laundering) முறைகேடான சுற்று (Round tripping) ஆகியனவற்றை செய்யக் கூடும்”மொரீசியசும் இப் படத்தில் வருகிறது. கொஞ்சம் பழைய கதாநாயக நட்சத்திரம் அது. ஆனால் இன்றைக்கும் ஃபார்மில் உள்ளது. அங்கிருந்தும் பதிவு செய்யப்பட்ட அந்நிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 2012-2020 ல் 6 மடங்கு ஜம்ப் ஆகியுள்ளது. காரணம் இதுவேதான். அந்நிய முதலீட்டுத் தொகை வரவிலும் லக்சம்பர்க்கை விட கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. 

வரி ஏய்ப்பு சொர்க்கங்கள்
லக்சம்பர்க், மொரீசியஸ் இரண்டுமே வரி ஏய்ப்பு சொர்க்கங்கள். ஆகவேதான் முகத்தை மறைத்துக் கொண்டு வருவதற்கு அந்நிய முதலீட்டாளர்கள் (இந்தியர்கள் கூட அந்நிய வேடத்தில்) லக்சம்பர்க், மொரீசியஸ் வழிகளில் வருகிறார்கள்.அண்மையில் பிரான்ஸ் “லீ மோண்ட்” நாளிதழும், வேறு சில ஊடகங்களும் சேர்ந்து வெளியிட்ட புலனாய்வுஅறிக்கையில் “லக்சம்பர்க்” நிதிகள் குற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுகிறது என்று கூறியுள்ளது. அதுபோல “டிரான்ஸ்பரன்சி இண்டர் நேசனல்” (Transparency International) அமைப்பும் லக்சம்பர்க் வாயிலாக வரும் தனியார் முதலீட்டில் 80% “அழுக்குப் பணமாக” சுற்றில் உள்ளவை என்று கூறியுள்ளது. இதுவெல்லாம் செபிக்கு தெரியாதா? அரசுக்கு தெரியாதா? இந்த தப்பிக்கும் வழிகள் தெரிந்தேதான் விடப்பட்டுள்ளதா? காவல் இல்லா கேட்டுகள் இவ்வளவு இருக்கும் போது, நன்கு இயங்கி வரும் எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களுக்கு காவலைப் பலப்படுத்துகிறோம்; செபி கண்காணிப்பை உறுதி செய்கிறோம்... என்பது நம்ப முடிகிற காரணமா? 
திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் நிறைந்த “லக்சம்பர்க்” படத்தை தமிழில் டப் செய்தால் “செபி” போலீசும், டிமிக்கி திருடர்களும்” என்று டைட்டில் வைக்கலாம்.

கட்டுரையாளர் ; க,சுவாமிநாதன், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்

;