economics

img

தமிழக பட்ஜெட்..... வளங்களை திரட்டாமல் கடன்களை வாங்குவது நிலைத்தகு வழி அல்ல....

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்பற்றி பல கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. மாநில அரசின்பட்ஜெட் தாராளமயக் கொள்கைகளை உறுதியாக பின்பற்றுகிறது. கிராக்கி சரிந்துள்ள நிலையில் அரசு இன்னும் வலுவாக களம் இறங்கி மக்கள் நிவாரணசெலவுகளையும் முதலீட்டு செலவுகளையும் செய்திருக்க வேண்டும். ஆனால் இதனை மட்டும் சொல்லி விவாதத்தை முடித்துவிடுவது சரியல்ல.

 மத்திய அரசு, மாநிலங்கள் மீது கட்டவிழ்த்துள்ள கடும் நிதிசார் தாக்குதல்களையும் உரிமை பறிப்புகளையும்  விமர்சிப்பதும், அம்பலப்படுத்துவதும் அவசியம். பாஜகவுடன் உள்ள  அரசியல் உறவு காரணமாகவும் மடியில் கனம் இருப்பதாலும் மாநில ஆளும் கட்சியும் அரசும் மத்திய அரசின் தாக்குதல் குறித்து மிகவும் அடக்கியே வாசிக்கின்றன.இருந்தாலும் மாநில நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் மத்திய அரசின் நிதிபகிர்வு தொடர்பான மோசமான அணுகுமுறை பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் துவங்கி, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமைகளை கிட்டத்தட்ட  கபளீகரம் செய்துள்ள ஜிஎஸ்டி வாயிலாகவும் பிறவழிகளிலும்  மாநிலங்களின் வரி வருமானத்தை பறிக்கும் மத்திய அரசின் வரிவிதிப்பு கொள்கைகள் தொடர்கின்றன. பெட்ரோல் ,டீசல் மீதான கலால் வரி விதிப்பில் கூட, வரி வழிப்பறியை செஸ் மற்றும் சர்சார்ஜ் வடிவத்தில் நடத்தி மாநிலங்களின் பங்கை சுவாஹா செய்யும் அணுகுமுறையை பட்ஜெட் உரை சுட்டிக்காட்டுகிறது. மத்திய அரசின் மொத்த வரிவருமானத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் செஸ் மற்றும் சர்சார்ஜ் பங்கு 10 சதவீதத்திலிருந்து  20 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

இந்திய, அந்நிய பெரும் வணிகநிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் மத்திய அரசு தாராளமாக வாரிவழங்கும் வருமான வரி சலுகைகள் மாநிலங்களின் வரி வருமானத்தை கடுமையாகபாதிக்கின்றன. ஏனெனில் வருமான வரிஎன்பது மாநிலங்களுடன் மத்திய அரசுபகிர்ந்துகொள்ள வேண்டிய கணக்கில்வருகிறது. அதில் வீழ்ச்சி என்பது மாநிலங்களை பாதிக்கிறது.   கோவிட் பெரும் தொற்று தொடர்பான நிதிச்சுமைகளை பெரும்பாலும் மாநிலங்கள் தான் சுமந்தன. ஜிஎஸ்டி நட்ட ஈடைக்கூட கொடுக்காத மத்திய அரசு, மாநிலங்களை அதிக வட்டியில் கடன் வாங்கி சமாளிக்கும் நிலைக்குத் தள்ளியது. 

அதேபோல் கடன் என்ற விஷயத்திலும்,  மாநில நிகர உற்பத்தி மதிப்பின் சதவிகிதம் என்ற அலகின்படி நிலைமை பார்க்கப்பட வேண்டும். கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் கடன் தொகையின் அதிகரிப்பு மாநில உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பை விட உயர்வாக உள்ளது. அதுமட்டுமின்றி, வளங்களை திரட்டாமல், கடன் வாங்கி மட்டுமே நிலைமையை சமாளிப்பது நிலைத்தகு வழி அல்ல. குறிப்பாக, தாதுப்பொருட்கள் உட்பட  இயற்கை வளங்கள் மூலமாக மாநில அரசுக்கு இன்னும்  கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். ஆனால் இங்கு பெரும் ஊழல் நிகழ்கிறது.

கட்டுரையாளர் : பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

;