economics

img

ரூ. 2 லட்சம் கோடியை ஏழைகள் கையில் நேரடியாக கொடுங்கள்.... மத்திய அரசுக்கு தொழிலதிபர் உதய் கோட்டாக் வேண்டுகோள்...

புதுதில்லி:
கொரோனா கால பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, ஏழை மக்களின் கையில்,2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான பணத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ‘கோட்டாக் மஹிந்திரா’ வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘கொரோனா பாதிப்பு மூலம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற இந்தியா அதிகளவிலான பணத்தை அச்சிட வேண்டும்; புதிதாகஅச்சிடும் பணத்தில் ஒரு பகுதியை, வசதிவாய்ப்புகள் குறைவாக இருக்கும் ஏழை மக்களுக்கும், மற்றொரு பகுதியை, கொரோனா மூலம் அதிகளவில் பாதிப்பு அடைந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் செலவு செய்ய வேண்டும்’ எனவும் கோட்டாக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்ப தாவது:

அரசின் நிதிநிலை அறிக்கையை விரிவுபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதை அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செய்வதற்குத் திட்டமிட்டு நாணய கொள்கையிலோ அல்லது பணத்தை அச்சடிப்பது குறித்தோ வரைவில் முடிவெடுக்க வேண்டும்.நாட்டில் இருக்கும் ஏழை - எளிய மக்களுக்கு நேரடியாக நிதி வழங்குவதில் அரசு நாட்டின் மொத்த ஜிடிபி-யில் 1 சதவிகிதம் அல்லது1 முதல் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டும். இதன் மூலம் நாட்டின் நுகர்வு அளவு மேம்படுவது மட்டும் அல்லாமல் ஏழை மக்களின் வாழ்வு மேம்படும்.இந்தக் கொரோனா காலத்தில் பல கோடி ஏழை மக்கள் முழுமையான மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவச் சிகிச்சையும், மருத்துவச் சலுகையும் அளிக்கப்பட வேண்டும்.

தற்போது இந்தியாவில் வர்த்தகங்கள் இரு பிரிவில் பாதிக்கப்பட்டு உள்ளன. ஒன்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவரும் வர்த்தகங்கள் மற்றும் கொரோனா பாதிப்பைத் தாங்கும் நிறுவனங்கள். மற்றொன்று - கொரோனா தொற்று இந்தியாவின் வர்த்தக முறையைப்பெரிய அளவில் மாற்றியுள்ள நிலையில், இந்த மாற்றத்தில் இணைய முடியாத நிலையிலுள்ள நிறுவனங்கள். இதில், முதல் பிரிவினருக்குச் சரியான நிதியுதவியை அளித்து மீட்க முடியும், ஆனால் 2-ஆவது பிரிவில் இருப்பவர்களை வர்த்தகச் சந்தைக்குள் கொண்டு வருவது மிகவும் கடினம். ஆனாலும், பாதிக்கப்பட்டு உள்ள வர்த்தகங்களுக்குப் போதிய அளவிலான வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவற்றை மீட்க வேண்டும். இவ்வாறு உதய் கோட்டாக் கூறியுள்ளார்.மேலும், இந்த நடவடிக்கைகளை இப்போதுசெய்யவில்லை என்றால் வேறு எப்போது செய்யப்போகிறோம்? என்றும் மத்திய அரசை நோக்கி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

;