districts

img

முதல்வரின் அறிவிப்போடு நிற்கும் நகைக்கடன் தள்ளுபடி

பொள்ளாச்சி, மார்ச் 6-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை மனதில் கொண்டு வாக்குகளுக்காக அவசரகதியில் அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி குளறுபடியால் பொதுமக்கள் தொடர்ந்து அழைக்கழிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மக்களை ஏமாற்றவே இந்த அதிமுக முயற்சிப்பதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த வாரம் பிப்.26 ஆம் தேதியன்று அரசு கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரையில்  அடகு வைத்துள்ள நகைக்கடன், 110 விதியின் கீழ் தள்ளுபடி செய்யப்படுமென, சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் பிப்.26 ஆம் தேதியன்று மாலையே தேர்தல் தேதி அறிவித்தது. இதன்பின்னர் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

இதனால்  அரசு விழாக்களும், அரசு நிகழ்ச்சிகளும், அரசு அறிவிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்பொழுது சட்டப்பேரவையின் கடைசி நிகழ்வாக தேர்தலை நினைவில் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பிற்கான முறையான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை என கூட்டுறவு கடன் சங்கங்களும், கூட்டுறவு வங்கிகளும் கூறிவந்தது.

இந்நிலையில், மார்ச் மாதத்திலிருந்து பொள்ளாச்சி அடுத்த அனுப்பர்பாளையம், கோமங்கலம், பூசாரிபட்டி, உள்ளிட்ட கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலிருந்து நகையை அடகு வைத்தவர்களுக்கு  நகையை மீட்டு செல்லுமாறு அறிவிப்பு வந்திருக்கிறது. இதனை நம்பிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் கூட்டுறவு வங்கிகளுக்கு அடகு வைத்த நகைகளை மீட்பதற்கான ஆவணங்களுடன் செல்கின்றனர். ஆனால், வங்கி அதிகாரிகள் தரப்பில் இருந்து இன்னும் முறையான அரசாணை வரவில்லை. வந்தால்தான் மீட்டு செல்ல முடியும் என கூறி திருப்பி அனுப்புகின்றனர். முதல்வரின் அறிவிப்பை நம்பி தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று திரும்புகின்றனர்.  

இதுகுறித்து வங்கிக்கு வந்து திரும்பும் பொதுமக்கள் கூறியதாவது. நாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அறிவிப்பை நம்பி  தினந்தோறும் கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று, ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறோம். எங்களை அரசும், கூட்டுறவு வங்கிகளும் அலைக்கழிக்கிறது. எங்களை ஏமாற்றினால் ஏமாற்ற நினைப்பவர்கள்தான் கடைசியில் ஏமாறுவார்கள் என கடும் கோபத்துடன் தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி பகுதிகளில் ஒரு சில கிராமத்திலுள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கைகள், கடந்த புதனன்று மாலை முதல் கூட்டுறவு வங்கிகள் தலைமை அறிவுறுத்தலின்படி நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முறையான அரசாணை வெளிவராமல் உள்ள நிலையில், பொதுமக்கள் நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கிகள் நடைமுறைபடுத்தாது. நகைக்கடன் தள்ளுபடி கோரி விபரம் கேட்டு தினமும் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வருத்தமளிக்கிறது. எதுவாயினும் தமிழக அரசு முறையான அரசாணை வெளியிட்டால், கூட்டுறவு வங்கிகள் நகைக்கடனை பொதுமக்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். -த.க.மணியாழன்

;