புதுச்சேரி, ஜூலை 17- புதுச்சேரி இளைஞர்களுக்கு வயது வரம்பு தளர்வு அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பற்ற மாநில பட்டியலில் புதுச்சேரி மாநிலம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களையும் முழுமையாக நிரப்ப வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில் 3 லட்சத்திற்கு மேலான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தி ருக்கின்றனர். அதில் பல ஆயிரம் இளை ஞர்கள் அரசு நிர்ணயித்துள்ள வயது வரம்பை தாண்டிவிட்டனர். இதனால், நம்பிக்கையை இழந்து வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தனியார் நிறுவனங்களை நோக்கி ஓடும் சூழல் அதிகரித்துள்ளது.
சமீபத்தில், நடந்து முடிந்த குரூப்-சி பணியிடங்களுக்கான தேர்வில் இரண்டு ஆண்டு வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டது, அப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. குரூப்-பி பணியிடங்களுக்கு மட்டும் ஒன்றிய பாஜக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது இளைஞர்களை ஏமாற்றும் செயலாகும். இதை வாலிபர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
மேலும், அரசு துறைகளில் காலிப்பணி யிடங்கள் நிரப்பபடாமல் இருந்த காலத்தையும், கொரோனா காலத்தையும் கணக்கில் கொண்டு வயது வரம்பு தளர்வு அளித்து சமவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் கௌசிகன்,செயலாளர் சஞ்சய் சேகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளனர்.