districts

கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

திருப்பூர், மே 12 - திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் அல்லது உயிரிழந்த பெற்றோர்களின் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தற்காலிகமாக அல்லது நிரந்தர பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஏற்படுத்தித் தரப்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறியுள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அளித்த செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் இந்த ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.  இம்மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக தாய், தந்தை இருவரும் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் சூழ்நிலையில் உள்ளவர்களின் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பெற்றோர்களை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி உள்ள குழந்தைகளுக்கும், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலமாக பாதுகாப்பு, பராமரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கு தங்குமிடம், உணவு, பாதுகாப்பு வசதிகள் அமைத்து கொடுக்கவும், அக்குழந்தைகளுக்கு தற்காலிக அல்லது நிரந்தர பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எனவே, திருப்பூர் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பின் அக்குழந்தைகளுக்கு தேவையான உரிய உதவிகளை  செய்து தருவதற்கு அக்குழந்தைகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் கீழ்க்காணும் மின்அஞ்சல், வாட்ஸ் அப் செயலி அல்லது தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டும், 1098 சைல்டு லைன் என்ற இலவச அலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கவும்.  தகவல் தெரிவிக்கப்பட வேண்டிய முகவரி: தொலைபேசி / வாட்ஸ் அப் செயலி எண்கள்: 90472 29921, 99949 73413, 73971 69779. தொடர்பு முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். மின் அஞ்சல் முகவரி: dcputirupur@gmail.com இதில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;