districts

img

கோயில் நிலங்களில் குடியிருப்போரின் வாடகை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 28-

கொரோனா காலத்தில் கோயில் நிலங்களில் குடியிருப்போரின் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் ஜூலை 28 அன்று  தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் கே.அன்பு தலைமைவகித்தார். மாநில அமைப்பாளர் சாமி நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டதலைவர், கே.என்.மல்லையன், மாவட்டசெயலாளர் சோ.அருச்சுணன் ஆகியோர் சிறப்புறையாற்றினர். இதில் எடுக்கப்பட்ட தீர்மானம் வருமாறு: கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும் கோயில் நிலங்களில் குடியிருக்கும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வாடகை  தொகையை தள்ளுபடி செய்யவேண்டும். அறநிலை சட்ட பிரிவு 78, 79ஐ பயன்படுத்தி வீடுகளை பூட்டி சீல்வைப்பது வீட்டை காலிசெய்வது போன்ற நடவடிக்கைகள் கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்றது போல்  இல்லாமல் இனி தவிர்க்கவேண்டும். அறநிலை சட்டம் 34ன்படி பலதலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடைவைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அந்தந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து கிரயதொகை தவணைமுறையில் பெற்று கொண்டு இடங்களை பயனாளிகளுக்கு சொந்தமாக ஆகவேண்டும். கிரையத்தொகை நடைமுறைக்கு வரும்வரை அடிமனை நீங்கலாக அதில் கட்டியுள்ள வீடுகளை, கடைகளை ,சட்டரீதியாக வாங்கவும் விற்க்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அறநிலைத்துறையை முற்றிலும் சீரழித்து தேவையற்ற அவதூறு பிர்ச்சாரங்கள் மூலம் அறநிலைத்துறையே தேவையில்லாத ஒன்று என்று தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு கோயிலையும் அதன் சொத்துக்களையும் தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவர துடிக்கும் மதவெறி அமைப்புகளின் செயல்பாட்டை தவிர்த்து அறநிலைத்துறையை பாதுகாக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;