districts

img

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை துவங்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, ஆக.1- தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிறன்று தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் ஜி.சிவன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கே.லோகநாதன் வரவேற்றார். மாநில துணை செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் ஆர்.எழிலரசு, மாவட்டப் பொருளாளர் எம்.சிலம்பரசன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பாப்பாரப்பட்டியில் அரசு வேளாண்மை அறிவியல் கல்லூரி துவக்க வேண்டும். பாப்பாரப்பட்டி - மலையூர் கிராமத்துக்கு பேருந்து வசதி செய்து தரவேண்டும்.

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். பென்னாகரத்தில் சிட்கோ தொழிற்பேட்டையும், தருமபுரி தடங்கத்தில் சிப்காட் அமைக்கும் பணியை துவக்க வேண்டும். பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா குடியிருந்த வீடு தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டு இடத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இந்த மாவட்ட பேரவை  கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஆ.ஜிவானந்தம், மாவட்டச் செயலாளராக சதீஷ், மாவட்டப் பொருளாளராக சிலம்பரசன் உள்ளிட்ட 19 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

;