districts

தஞ்சாவூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! : சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.6 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சேகர் தலைமை வகித்தார்.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர் வீ.கருப்பையா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், விவசாயிகள் சங்கம் செந்தில்குமார், கிளைச் செயலாளர் ஜெகநாதன், அடைக்கலம், மாதர் சங்கம் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  தர்ம ஊரணியைத் தூர்வார வேண்டும். மணக்காடு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம், குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி செய்து தர வேண்டும். தொகுப்பு வீடுகள் கட்டித் தரவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்திட வேண்டும். மூடிக் கிடக்கும் நூல் நிலையம், சேவை மையத்தை திறந்து செயல்படுத்த வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்க வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி, சுடுகாடு சீரமைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நிழற்குடை அமைத்திடுக! திருவையாறு கடை வீதியில், கட்டணமில்லா கழிப்பறை அமைத்து தர வேண்டும். பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும்

. ரகுமான் நகர் பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவையாறு அருகே கண்டியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.கதிரவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் பேசினர்.  நகரப் பேருந்தை இயக்குக! தஞ்சாவூர் பாலாஜி நகர், திரிபுரசுந்தரி நகர், ராஜப்பா நகர் மக்களின் அடிப்படை கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பாலாஜி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜா என்ற ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.  ஏ.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, என். சரவணன், மாநகர செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர் கே.அன்பு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், “ராஜப்பா நகர், திரிபுரசுந்தரி நகர், சாலைகளை சரி செய்ய வேண்டும். பாலாஜி நகர் முதல் போஸ் நகர் வரை சாலையை செப்பனிட வேண்டும். பாலாஜி நகர் படிப்பகத்தை புதுப்பித்து, கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். மேம்பாலம் காவல்துறை நிழற்குடை அருகே பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்ய வேண்டும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து பழைய ஹவுசிங் யூனிட், துளசியாபுரம், தங்கம் நகர், எழில் நகர் வழியாக மருத்துவக் கல்லூரிக்கு சென்று வந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. 

;