districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2011 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 16,82,687 பேர் உள்ளனர். இதில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1,96,050 பேர். மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 1, அரசு வட்ட மருத்துவமனை 4, தனியார் மருத்துவமனைகள் 4, தனிமைப்படுத்தும் முகாம்கள் 5 உள்ளன. மே 9 நிலவரப்படி 13,952 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,786 பேர் குணமடைந்துள்ளனர். 1,048 பேர் சிகிச்சையில் உள்னர். 118 பேர் உயிரிழந்துள்ளனர். மே 10ஆம் தேதி காலை 10.00 மணி நிலவரப்படி கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 62 ஐசியு படுக்கைகள் அனைத்திலும் நோயாளிகள் உள்ளனர். 323 ஆக்ஸிஜன் படுக்கைகளில் 2 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. 944 சாதாரண படுக்கைகளில் 674 படுக்கைகள் காலியாக உள்ளன. 1,320 மொத்த படுக்கைகளில் 676 படுக்கைகள் காலியாக உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் கூடுதலாகி உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில் சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய வட்ட மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றன. சின்னசேலம், திருக்கோவிலூர், சங்கராபுரம் உள்ளிட்ட வட்ட மருத்துவமனைகளில் மோட்டார் பழுதடைந்தும், குடிநீர் தொட்டிகள் இடிந்துவிழும் நிலையிலும் உள்ளன. இவற்றை உடனே சீரமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்கோவிலூர் மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகியவற்றிற்கு தனி கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும். தனியாக ரத்த சேமிப்பு வங்கி உருவாக்கப்பட வேண்டும். இங்கு நான்கு நாட்களுக்கு முன்பு 20 ஆக்சிஜன் படுக்கைகளும், 14 சாதாரண படுக்கைகளும் புதிதாக அமைப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. சின்னசேலம் வட்ட மருத்துவமனையில் ஒரு கட்டிடத்தில் இரண்டு அறைகளில் தலா 10 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். குறுகிய அறைகளாக இருப்பதால் படுக்கைகள் நெருக்கமாக அமைக்கக்கூடிய நிலை உள்ளது. அதேபோல் 2 கழிவறைகளும், 4 குளியல் அறைகளும் இங்கு உள்ளன. மோட்டார் பழுதடைந்து உள்ளதால், லயன்ஸ் கிளப் மூலம் தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது. பிற பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் இல்லை. ஸ்கேன் மையம் மற்றும் உடற்கூறு ஆய்வு ஆகியவற்றிற்கு தனி கட்டிட வசதி தேவைப்படுகிறது. சங்கராபுரம் வட்ட மருத்துவமனையில் கொரோனா நோய் தொடர்பான சிகிச்சைகளுக்கு முழுமையான ஏற்பாடுகள் இனிதான் செய்ய வேண்டியுள்ளது. மாவட்டத்தில் அயன்வேலூர், குமாரமங்கலம், ஜி.அரியூர், சங்கராபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகிய இடங்களை கொரோனா தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்கான மையங்களாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சில இடங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகினறன. இம்மையங்களில் உணவு, மருந்து உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தாலும் கூடுதல் தரத்துடனும், தேவையான அளவும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் சில நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. உளுந்தூர்பேட்டை நகரில் கடந்த சில நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருகில் உளள சில மாவட்டங்களில் இருந்தும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் கொண்டுவரப்படுவதால் ஆக்சிஜன் இணைக்கப்பட்டுள்ள படுக்கைகள் பற்றாக்குறையாகவே உள்ளன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த படுக்கைகளை கூடுதல் எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையுடன் இணைந்தே இருப்பதால் அங்கு கூடுதலாக தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் தினசரி பத்து நபர்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசியின் மீது மக்களுக்கான சந்தேகத்தை போக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஆய்வு மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை கூறினார். அதே வேளையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம் என கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் கூறினார்.

-சுவாமிநாதன்

;