districts

பரவனாற்றை திசை திருப்ப வேண்டிய அவசியம் ஏன் என்எல்சி நிர்வாகம் விளக்கம்

நெய்வேலி, ஜூலை 31-

      கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப் பட்ட நிலங்களில் வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை தொடங்கியது.

    இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினர்.  இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பரவனாறு கால்வாய் அமைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலை யில், பரவனாற்றை திசைதிருப்பம் ஏன் என்பது குறித்து என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  

     மேலும், இதுகுறித்து என்எல்சி நிர்வாகம் கூறியதாவது:-  

     அதிக பருவமழை காலங்களில் ஆற்றின் நீர்மட்டம் கூடும்போது, சுற்றி யுள்ள வயல்களிலும், கிராமங்களிலும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. அதனால் பரவனாற்றை திசை திருப்ப வேண்டிய அவசியம் உள்ளது.

     பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் ஆண்டுக்கு 2 முதல் 3 பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். சுரங்கம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக பரவனாறு நிரந்தர கால்வாய் அமைக்கும் பணி முக்கியமானது.  

     பரவனாறு பாதையில் இருந்து 60 மீட்டர் தூரத்தில் சுரங்கம்-2 வெட்டு முகம் முக்கியத்துவத்தை எட்டி உள்ளது. பருவமழை விரைவில் வர உள்ளதால், பரவனாற்றில் நிரந்தர ஆற்றுப் பாதையை அமைக்க வேண்டியது அவசியம்.

     புதிதாக பயிர் செய்ய வேண்டாம் என சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின் போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சி ஐஎல் முன் வந்துள்ளது.  

    பயிர் இழப்பீடு வழங்க, தனிநபர் பெயரில், மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கெனவே காசோலைகளை, என்எல்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால், இந்த சீரமைப்பில் விவசாய வயல்கள், வற்றாத பாசனத்திற்கு தண்ணீர் பெறும்.  

     இவ்வாறு கூறப்பட்டுள்ளது.