districts

img

தொய்வின்றித் தொடர்கிறது கியூபப் புரட்சி!

மூத்த தலைவர்களுடன்  தியாஸ் கேனல்

ஹவானா, ஏப். 21 - “கியூப கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் முதன்மைச் செயலாளர் என்ற முறையில் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு முடிவுக்கு வருகிறது; அந்தப் பொறுப்பில் நான் எனது கடமையை நிறைவாக செய்து முடித்திருக்கிறேன் என்ற திருப்தியுடன், நமது நேசத்திற் குரிய தேசத்தின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது என்ற உறுதியுடனும் கட்சியின் உயர் பொறுப்புகளில் அடுத்த தலைமுறை முழுமையாக பங்கேற்க வழி செய்யும் விதத்தில், அந்தப் பொறுப்புகளில் நான் தொடர்ந்து நீடிப்பதில்லை என்ற அறிவிப்புடனும் எனது பொறுப்பினை நிறைவுசெய்கிறேன். கட்சியின் ஒரு உறுப்பினராக நான் தொடர்வேன்; கட்சி யின் ஒரு புரட்சிகரமான போராளி யாக நான் தொடர்வேன்; எனது இறுதி மூச்சு வரை கட்சியின் பணிகளுக்காக எனது அதிகபட்ச பங்களிப்பை செலுத்து வேன்; என்னைத் தொடர்ந்து பொறுப்பு க்கு வரும் எனது சக தோழர்கள் பலமும் மதிப்பும் வாய்ந்தவர்கள் என்ற உறுதி யான புரிதல் எனக்கு இருக்கிறது.  கியூப புரட்சியையும் சோசலிசத்தை யும் பாதுகாப்பதற்காக எனது இறுதிக் காலம் வரையிலும் உங்களோடு ஒரு தோழராக மிகுந்த உறுதியோடு பயணிப்பேன்”. - ரால் காஸ்ட்ரோவின் இந்த அறி விப்பு உலகெங்கிலும் அரசியலை உற்றுநோக்கும் சக்திகளுக்கு, கம்யூனி ஸ்ட்டுகளின் மேன்மை, ஜனநாயகம் என் பதன் உயர்ந்த மாண்புகளை கம்யூ னிஸ்ட் கட்சிகள் எப்படி பின்பற்றுகின் றன என்பதை விளக்கும் விதமாக அமைந்தது.

கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8வது மாநாட்டில், கட்சியின் மத்தியக்குழு வின் முதன்மை செயலாளர் பொறுப்பி லிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட  தோழர் ரால் காஸ்ட்ரோ ஆற்றிய உரை, கியூபாவின் இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும் உத்வே கம் அளிப்பதாக அமைந்தது. கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் 8வது  மாநாடு ஏப்ரல் 16 அன்று ஹவானா வில் துவங்கியது. ஏப்ரல் 19 வரை நடை பெற்ற இந்த மாநாட்டிற்கு முதன்மைச் செயலாளரும், ராணுவத் தளபதியு மான ஜெனரல் ரால் காஸ்ட்ரோ ரஸ் தலைமையேற்றார். ஏப்ரல் 19 அன்று மாநாடு நிறைவுபெற்ற நாள், கியூப புரட்சியின் சோசலிசப் பிரகடனத்தை கியூபாவின் மகத்தானத் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ வெளியிட்ட தன் 60ஆம் ஆண்டு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோசலிச கியூபாவுக்கு வழிகாட்டும் கட்சி

மாநாட்டைத் துவக்கி வைத்து கட்சி யின் இரண்டாம் செயலாளர் ஜோஸ் ரமோன் மச்சாதோ வென்ட்டுரா உரையாற்றினார். “வரலாறு நெடுகிலும் நம்மை வழி நடத்திய தேச பக்தர்களின் அடுத்த தலை முறை இப்போது வந்துவிட்டது. சுதந்திரம், சமூக நீதி, கண்ணியமான வாழ்க்கை ஆகிய மாண்புகளை உயர்த்திப் பிடிக்கிற, தேசிய ஒற்றுமை யை உத்தரவாதப்படுத்துகிற ஒரு அமைப்பாக நமது கட்சி வழிகாட்டி வரு கிறது. கட்சியின் 7வது மாநாட்டிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளில், நாடு  முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர் களும் ஒட்டுமொத்த கியூப மக்க ளும் மிக முக்கியமான அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றிருக் கிறார்கள்; கடந்த மாநாட்டில் நாம் திருத்தி அமைத்த வழிகாட்டுதல்களை ஏற்று செயல்படுத்தியிருக்கிறார்கள். மக்களால் வாக்களித்து இறுதி செய்யப்பட்ட புதிய அரசிய லமைப்புச் சட்டத்தையும் அமல்படுத்தி யிருக்கிறார்கள்” என்று மச்சாதோ கூறினார்.  கடந்த 5 ஆண்டு காலத்தில் செய்து  முடித்தவை பற்றியும், தொடர்ந்து செய்யப்பட வேண்டிய நடவடிக்கை கள் பற்றியும் விரிவாக விவரித்த அவர், கட்சியின் கிளைகள் அளவில் உள்ள அமைப்புகள் எந்த அளவிற்கு மக்க ளின் நம்பிக்கையை பெற்றவையாக இருக்கின்றன என்பது குறித்தும் அவற்றை இன்னும் எப்படி மேம்படுத்து வது என்பது குறித்தும் பேசினார். மாநாட்டில் கியூப சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பதை பெரு மிதத்துடன் அவர் சுட்டிக்காட்டினார். உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள், பல்வேறு சேவைத் துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள், ஓய்வூதியர்கள் உள்பட அனைத்து தரப்பிலிருந்தும் பிரதிநிதி கள் பங்கேற்றிருப்பதை குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த பிரதிநிதிகளில் 94சதவீதம் பேர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் என்றும் தெரி வித்தார். 

விவாதிக்கப்பட்ட நான்கு அம்சங்கள்

துவக்க மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்தாபன மாநாட்டில் மத்தி யக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து முதன்மைச் செயலாளர் ரால் காஸ்ட்ரோ  உரையாற்றினார். அந்த அறிக்கை யில் பிரதானமாக நான்கு அம்சம் இடம் பெற்றிருந்தன. கியூபப் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் சோச லிசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத் திற்கு கொண்டு செல்வது; புரட்சி  மற்றும் கட்சியின் சமூகப் பொருளாதார கொள்கைகளுக்கான வழிகாட்டுதல் களின் அமலாக்கம் 7வது மாநாட்டிற்குப் பிறகு கியூப சமூக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள விளைவு கள்; கட்சியின் செயல்பாடு, மக்களுட னான அதன் உயிரோட்டமான தொடர்பு, தத்துவார்த்த செயல்பாடு மற்றும் கட்சி ஊழியர் கொள்கை - ஆகிய நான்கு அம்சங்கள் பற்றி அறிக்கை யை முன்மொழிந்த ரால் காஸ்ட்ரோ அவை பற்றி விரிவாக விவரித்தார்.  60 ஆண்டுகளுக்கு முன்பு கியூப புரட்சியின் சோசலிசக் குணாம்சத்தை பாதுகாப்பதற்காக கட்சியின் அமைப்பு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கட்சியின் உறுப்பினர்களும், கிளைகளும் மக்களோடு எந்த அளவிற்கு உயிரோட்டமான தொடர்பும் தத்துவார்த்த உறுதியும் கொண்டி ருக்க வேண்டும் என்றும் தோழர் பிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்ட அம்சங் களை நினைவூட்டிய முதன்மைச் செயலாளர் ரால் காஸ்ட்ரோ, பிடல் காஸ்ட்ரோவின் வழிகாட்டுதல் களையும் அவர் உயர்த்திப் பிடித்த ஸ்தாபன நெறிகளையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்றும் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 17, 18  தேதிகளில் மாநாடு விரிவான விவாதங்களை நடத்தியது. மேற்கண்ட நான்கு பிரதான அம்சங்களையும் விவாதிப்பதற்காக மாநாட்டுப் பிரதிநிதி கள் நான்கு கமிஷன்களாகப் பிரிக்கப் பட்டு விவாதம் நடைபெற்றது. கியூப ஜனாதிபதியும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தியாஸ் கேனல் உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மாநாட்டு வழிகாட்டும் குழுவாக செயல் பட்டு, விவாதங்களை ஒருங்கிணைத் தார்கள்.

அரசின் செயல்பாடு பற்றி விவாதம்

முதன்மைச் செயலாளர் முன் மொழிந்த அறிக்கை மட்டுமின்றி, கியூப அரசின் அமைச்சரவை முன்மொழிந்த அரசின் செயல்பாடுகள் மற்றும் அதை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான அறிக்கையும் பிரதிநிதி களால் விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கையை கியூப அரசின் அமைச்சரவைச் செயலாளரும், கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினருமான ஜோஸ் ரிக்கார்டோ குவேரா முன்மொழி ந்தார்.  அந்த அறிக்கை, கடந்த 5 ஆண்டு காலத்தில் அரசின் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும், குறை பாடுகளைக் களைவதற்காக கட்சி யும் அதன் உறுப்பினர்களும் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் விவரித்தது. அரசுப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள், மக்கள் பிரச்சனைகள் சில இடங் களில் உடனடியாக கவனிக்கப்படா மல் காட்டப்படும் அலட்சியம், அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அந்த அறிக்கை விவரித்தது. இந்த அம்சங்களை எப்படி எதிர்காலத்தில் மேம்படுத்துவது என்பது குறித்தும் விவாதம் நடைபெற்று, இரண்டு அறிக்கைகளும் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

புதிய தலைமை

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 18 அன்று கட்சியின் புதிய தலைமைக்கான முன்மொழிவை முதன்மைச் செயலா ளர் ரால் காஸ்ட்ரோ, மாநாட்டுப் பிரதி நிதிகளிடையே முன்மொழிந்தார். அதன் மீது பிரதிநிதிகள் வாக்கெடுப்பும் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 19 அன்று கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட் டது. கட்சியின் புதிய முதன்மைச் செய லாளராக மிகுயேல் தியாஸ் கேனல் பெர்முடஸ் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டுப் பிரதிநிதிகளிடையே பெரும் உற்சாகத்துடன் இதை ரால் காஸ்ட்ரோ அறிவித்தார். சோசலிச கியூபாவின் ஜனாதிபதி யாக உள்ள தியாஸ் கேனல், கட்சி யின் முதன்மைச் செயலாளராக  தேர்வு செய்யப்பட்டிருப்பது, சோசலிச கியூபாவின் 60 ஆண்டு கால வரலாற்றில் பிடல் காஸ்ட்ரோ, ரால் காஸ்ட்ரோ வைத் தொடர்ந்து ஒரு புதிய தலை முறையிடம் சோசலிசக் கட்டுமானத் திற்கான பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது.

தியாஸ் கேனலுடன் 14 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு தேர்வு செய்யப்பட்டது. 14 பேரில் 9 பேர் ஏற் கெனவே அரசியல் தலைமைக்குழு வில் இடம்பெற்றிருப்பவர்கள். மச்சா தோ உள்ளிட்ட 5 மூத்த தலைவர்கள் அரசியல் தலைமைக்குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர 6 பேர் கட்சியின் மத்திய செயற்குழு வின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய அரசியல் தலைமைக்குழு வில் ஜனாதிபதி தியாஸ் கேனல், தேசிய மக்கள் நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் ஹெர்னான்டஸ், கியூப குடியர சின் துணை ஜனாதிபதி சால்வடார் மெசா, துணைப் பிரதமர் ராபர்ட்டோ மொரேல்ஸ், புரட்சிகர ராணுவப் படை களின் தளபதி ஜெனரல் ஆல்வரோ லோபஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ், கியூப  தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் உலிசஸ் கிளார்ட்டே, கியூப தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரசா மரியா, கியூப மரபணுவியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப பொறியியல் மையத்தின் பொது இயக்குநர் மார்த்தா அவிலா, பிரதமர் மனுவேல் குரூஸ், அமைச்ச ரவை செயலாளர் ஜோஸ் ரிக்கார்டோ குவேரா, தொழில் நிறுவனங்கள் நிர்வாகக் குழுவின் செயல் தலைவர் லூயிஸ் ஆல்பர்ட்டோ ரோட்ரிகஸ், உள்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல் லாசரோ ஆல்பர்ட்டோ, கட்சியின் ஆர்ட்டிமிசா மாகாண குழுவின் முதன் மைச் செயலாளர் பிளாடிஸ் வெர்டி சியா ஆகிய 14 பேர் இடம்பெற்றுள்ள னர்.

கியூபாவின் புதிய கட்சித் தலைமை யை தேர்வு செய்த 8வது மாநாட்டில் நிறைவாக புதிய முதன்மைச் செய லாளர் தியாஸ் கேனல் உரையாற்றி னார். அதைத் தொடர்ந்து மாநாடு எழுச்சி மிகு முழக்கத்துடன் நிறைவுபெற்றது: “புரட்சியைப் பாதுகாப்போம். புரட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். சோசலிச கட்டுமானத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்வோம். நாம் இன்னும் பணியை செய்து முடித்துவிடவில்லை; ஆனால் முன்னெப்போதையும்விட இன்னும் துல்லியமாக சோசலிசத்தை கட்டமை ப்பதற்கான மகத்தான பணியை சற்றும் தொய்வின்றி தொடரும் கடமை அளிக்கப்பெற்றுள்ளோம். அந்தக் கடமையை செய்து முடிப்போம்.”

- கிராண்மா செய்திகளில் இருந்து
எஸ்.பி.ஆர்.


 

 

;