districts

img

வீட்டையே வகுப்பறையாக மாற்றிய பழங்குடியின பட்டதாரிப் பெண்

அடர்ந்த வனப்பகுதிகளிலும், மலையடிவார கிராமங்களிலும் வாழும் பழங்குடியின குழந்தைகள் கல்வி கற்பதே சவாலானது. அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி பயில்வது என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கொரோனா 
ஊரடங்கினால் ஓராண்டிற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடிக் கிடக்கின்றன. ஒரு சிலரிடம் செல்போன் வசதி இருந்தாலும், நெட்வொர்க் சிக்னல் கிடைக்காது. பள்ளிக் கூடத்திற்கு சென்று கல்வி பயில முடியாத நிலையில், செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வித் தொலைக்காட்சிவகுப்புகளில் பங்கெடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. அத்தகைய ஒரு கிராமத்தில் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அறிவுப் பசியை தீர்த்து வருகிறார் முதல் தலைமுறை பட்டதாரியான சந்தியா.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லையான வாளையார் அருகேயுள்ள மலையடிவாரக் கிராமம் சின்னாம்பதி. இது நகரத்தின் தொடர்பு எல்லைக்கு அப்பால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஒரு கடைக்கோடி கிராமம். இக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடிப்பதே அரிது. அதிலும் பெண் குழந்தைகள் படிப்பது என்பது அதனினும் அரிது. அத்தகைய கிராமத்தின் முதல் பட்டதாரி, சந்தியா. அப்பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகளான இவர், தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ படிப்பு முடித்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே கொரோனா முதல்அலை ஊரடங்கினால் ஊர் திரும்பிய சந்தியா, அக்கிராமத்து குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால் பாடம் எடுத்தார். அச்சேவை கொரோனா இரண்டாவது அலையிலும் தொடர்கிறது. கட்டிக் கொண்டி ருக்கும் தனது வீட்டையே சந்தியா வகுப்பறையாக மாற்றியுள்ளார்.

சுமார் 20 குழந்தைகளுக்கு அவர் பாடம் எடுத்து வருகிறார். காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையிலும் தொடர்ந்து வகுப்புகள் எடுத்து வருகிறார். “லாக் டவுனால ஸ்கூல் பூட்டியிருக்குது. இங்க டவர் சுத்தமா கிடைக்காது. அதனால ஆன்லைன் கிளாஸ் அட்டேன் பண்ண முடியாது. சந்தியா அக்கா தான் எல்லோரையும் நோட், புக்கு எடுத்திட்டு வரச் சொல்லி கிளாஸ் எடுத்திட்டு இருக்காங்க. இவங்க இல்லனா நாங்க படிக்காம சும்மா தான் இருந்திருக்கணும்” என்கிறார் மாணவர் முகேஷ்.‘‘எங்க ஊருல யாரும் இதுவரை காலேஸ் போயி படிச்சது இல்ல. முதன் முதலா சந்தியா தான் படிச்சிருக்கா. அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அதுமட்டும் இல்லாம குழந்தைகளுக்கு டியூசன் எடுக்குறாங்க. ஸ்கூல் பூட்டிக் கிடக்குது. இங்க கரெண்ட் இல்லாதனால, டிவியும் ஓடாது. ஒருத்தர் கிட்ட போன் இருக்கும். ஒருத்தர் கிட்ட போன் இருக்காது. அதனாலஆன்லைன் கிளாஸ் போக முடியாது. சந்தியா குழந்தைகளை பார்த்திட்டு, வகுப்பும் எடுக்குறாங்க. அதனால பள்ளிக்கூடம் இல்லை என்கிற பிரச்சனை எங்களுக்கு இல்லாம இருக்குது” என்கிறார் அக்கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி.

இதுகுறித்து சந்தியா கூறுகையில், ‘‘சின்னாம்பதியில முதல் பட்டதாரி நான் தான். அது எனக்கு பெருமையா இருக்கு. என்னைப் போல மற்றவர்களும்வரணும். அதுக்காக தான் நான் கிளாஸ் எடுத்திட்டு இருக்கேன். நான் சிரமப்பட்டு படிச்சேன். நான் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது. இங்க நெட்வோர்க் பிரச்சனை ஜாஸ்தியா இருக்கு. அதனால ஆன்லைன் கிளாஸ் அட்டென் பண்ணவும் முடியாது. படிக்கவும் முடியாது. நான் கிளாஸ் எடுக்கலனா குழந்தைகளுக்கு படிப்பு என்னன்னே தெரியாம போயிடும். எல்லாத்தையும் மறந்திடுவாங்க. அதனால தான் சொல்லித்தரேன். கணக்கு, ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லித்தரேன். டீச்சர் எப்படி கிளாஸ் எடுப்பாங்களோ, அப்படியே நானும் எடுக்கிறேன். குழந்தைகள் இப்போ நல்லா படிக்குறாங்க. இவங்க நல்ல நிலைமைக்கு வருவாங்க” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.கல்வி கற்பதோடு நின்று விடாமல், அதனை மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார் சந்தியா.

தொகுப்பு : அ.ர.பாபு

;