districts

img

சி.ஜி. பெயரை கேட்டாலே அஞ்சிய முதலாளிகள் - பி. கருப்பையன் சிஐடியு கடலூர் மாவட்டச் செயலாளர்

தோழர் சி.கோவிந்தராஜன் ஒன்றுபட்ட தென்னாற்காடு  மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தொழிற்சங்கங்களை உருவாக்கிய தோடு அதனை வலுவாக வளர்த்தெடுத்தவர்.  சிஐடியு வின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் சி ஜி. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்து உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோது நெல்லிக்குப்பம்  பாரி சர்க்கரை ஆலை தொழிலாளர்களிடையே பணி செய்யவேண்டும் என்று கட்சி கேட்டுக்கொண்டது. உடனே நெல்லிக்குப்பம் புறப்பட்டுச் சென்று தனது  மாமாவின் உதவியுடன் பாரி சர்க்கரை ஆலையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பாரி ஆலையில் ஏற்கனவே தொழிற்சங்கம் செயல்பட்டுவந்தாலும் 1937ஆம் ஆண்டில் தான் தொழிற்சங்க சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பழைய சங்கங்களில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை தொழிலாளர் சங்கமும் ஒன்று. இச்சங்கத்தில் இணைந்து செயல்பட்ட தோழர் சி ஜி ஒரு கட்டத்தில் சங்கத்தின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் தனது எழுத்தர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர தொழிற்சங்க பணியில் ஈடுபட்டார்.

புதிய சங்கங்கள் உதயம்

1943-44 ஆம் ஆண்டுகளில் கைத்தறித் தொழில்  மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. கைத்தறி  தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாத்திடச் சங்கம் அமைப்பது தான் தீர்வு எனக் கருதிய தொழிலாளர்கள் நெல்லிக்குப்பம் சென்று சிஜியை சந்தித்துப் பேசினார். தோழர் சி ஜி கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை நடுவீரப்பட்டு சி.என். பாளையம் குறிஞ்சிப்பாடி கடலூர் முதுநகர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று கைத்தறி நெசவாளர்  சங்கத்தை உருவாக்கியதோடு பின்னர் அவற்றை இணைத்து மாவட்ட அளவில் கைத்தறி சங்கத்தைத் தோற்றுவித்தார். தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தென்னாற்காடு மாவட்ட மோட்டார் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராகச் செயல்பட்டார். சிதம்பரம் திண்டிவனம்  பகுதிகளில் அரிசி ஆலை எண்ணெய் ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களைத் திரட்டி தென்னாற்காடு மாவட்ட ரைஸ் அண்ட் ஆயில்மில் தொழிலாளர்  சங்கம் உருவாக்கப்பட்டு அதன்தலைவராகச் செயல்பட்டார். தென்னாற்காடு மாவட்ட மரத் தொழிலாளர் சங்கம், கடலூர் முதுநகரில் ஓட்டல் தொழிலாளர் சங்கம், படகு தொழிலாளர் சங்கம், துறைமுக தொழிலாளர் சங்கம் என பல சங்கங்களைத் துவக்கி இச்சங்கங்களுக்குத் தலைவராகச் செயல்பட்டார்.  

மின்சாரம் முதல் ரயில்வே வரை...

 பின்னர் தென்னாற்காடு மாவட்ட எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்ட் தொழிலாளர் சங்கம் தென்னாற்காடு மாவட்ட மின் விநியோக நிறுவனத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்டவற்றையும் துவங்கக் காரணமாக இருந்த தோழர் சி.ஜி இச் சங்கங்களுக்குத் தலைவராகச் செயல்பட்டார். 1943 ஆம் ஆண்டில் பொன்மலையில் ரயில்வே தொழிலாளர் சங்கம் புதுப்பிக்கப்பட்ட பிறகு அதன் கடலூர் கிளையின் பொறுப்பாளராகச் செயல்பட்டார். நெய்வேலியில் 1953 ஆம்  ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைச் சந்தித்து பழுப்பு நிலக்கரி தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சங்கத்தைத் துவக்கினார். 1960ஆம் ஆண்டு வடலூரில் சேஷசாயி இன்சுலேட்டர் நிறுவனமும் நெய்சர் நிறுவனமும் துவங்கப்பட்டது. இக்காலத்தில் நெய்வேலியில் தங்கியிருந்து செயல்பட்ட தோழர் சி.ஜி அவ்வப்போது வடலூர் வந்து தொழிலாளர்களைச் சந்தித்து இவ்விரு ஆலைகளிலேயும் தொழிற்சங்கத்தைத் துவங்கினார். ஒரு கட்டத்தில் நேரடி யாகத் தலைவர் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டார். இதே  காலகட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் ஆரோபுட் தொழிற்  சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களை ஒருங கிணைத்து தொழிற்சங்கம் துவங்கப்பட்டு அதன் தலைவராகச்  செயல்பட்டார்.

பிறமாவட்டங்களிலும் தொழிற்சங்க இயக்கத்தை வளர்த்தவர்

 தென்னாற்காடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் சென்று தொழிற்சங்க பணியில் ஈடுபட்டார் 1953-54 ஆம் ஆண்டுகளில் தஞ்சை மாவட்டத்தில்  ஆரூரான் சர்க்கரை ஆலைத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவதில் பங்கெடுத்தார். அச்சங்கத்தின் ஆலோசகராகவும் தேர்வு செய்யப்பட்டுச் செயல்பட்டார்.  1970ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தொழிற்சங்கங்க ளுக்கு வழிகாட்டிய தோழர் சி ஜி 1977 ஆம் ஆண்டிலிருந்து  அங்குள்ள ரோடியர், சவானா மற்றும் பாரதி மில் தொழிலாளர்  சங்கங்களுக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுச் செயல்பட்டார்.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிறுவனர்

முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை தொழிற்சங் கத்திலும் தலைவராக இருந்து செயல்பட்டார்.17.02.1980ல் மதுரையில் நடைபெற்ற போக்குவரத்து சம்மேளன அமைப்பு மாநாட்டில் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு  செயல்பட்டார். மின்சார வாரியத்தில் தனித்தனியாகச் செயல்பட்டு வந்த சங்கங்களை ஒருங்கிணைத்து மதுரை யில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் மத்திய அமைப்பின் தலை வராகத் தோழர் சிஜி தேர்வு செய்யப்பட்டார்.11ஆண்டுகள் மத்திய அமைப்பின் தலைவராக இருந்தார்.

சிஐடியு வில் இணைப்பு

1970ஆம் ஆண்டு மே-30 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற சிஐடியு அமைப்பு மாநாட்டிற்குச் சென்று வந்த பிறகு தென்னார்க்காடு மாவட்டத்தில் ஏஐடியுசியில்  இணைக்கப்பட்டிருந்த சங்கங்களில் பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டு சிஐடியு வில் இணைவதென ஏகமானதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனைத்து சங்கங்களும் சிஐடியு வில் இணைக்கப்பட்டன. சிஜி என்கிற இரண்டு எழுத்தைக் கேட்டாலே முதலாளி கள் அஞ்சி நடுங்கிய காலம் உண்டு. சிஐடியு வலுவாக இருக்கும் இடங்களில் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம், போனஸ், இதர சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத முதலாளிகள் சங்கத்தைப் பலவீனப்படுத்திடக் கருங்காலி களைக் கொண்டு நிர்வாகத்திற்குச் சாதகமாக ஒரு சங்கத்தை ஏற்படுத்திக்கொள்வது என்பது அன்றிலிருந்து இன்று வரை நீடிக்கிறது. அந்த வகையில்தான் சிஐடியு சங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத  நெல்லிக்குப்பம் பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் கருங்காலி களை ஏவிவிட்டு தோழர் சி ஜி யை கொலை செய்ய முயன்றது. 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட்-5 ஆம் தேதி பேரவை கூட்டம் முடிந்து வீடு திரும்பும் வழியில் ரவுடிகள்  கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து கீழே விழுந்தார்.  அங்கிருந்த தொழிலாளர்கள் உதவியோடு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  உயிர் பிழைத்து வந்தார். கருங்காலிகளால் தாக்கப்பட்ட தோழர் சி.ஜி வடலூர் சேஷசாயி நிறுவனத்திலும் சிஐடியு சங்க  நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சிய நிர்வாகம் சங்கத்தைப் பிளவுபடுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. தோழர் சிஜியின் தலைமறைவு வாழ்க்கையைப் பயன்படுத்திய நிர்வாகம் சில கைக்கூலிகளைக் களத்தில் இறக்கியது. 1978 ஆம் ஆண்டு நிர்வாகத்தின் உதவியுடன் கருங்காலி கள் சங்கத்தையும் சங்க அலுவலகத்தையும் கைப்பற்றினர். தலைமறைவு வாழ்க்கை முடிந்து வெளியில் வந்த பிறகு சங்க அலுவலகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தின் உள்ளே இருந்த தோழர் சிஜி யை வெளியிலிருந்து கற்களையும் தடிகளையும் கொண்டு தாக்கினார்கள். அங்கிருந்த நம் தொழிலாளர்கள் உதவியுடன் மீட்கப்பட்டார்.

சேஷசாயி ஆலை தொழிலாளர்களைப் பாதுகாத்தவர்

 பின்னர் 1984ஆம் ஆண்டு தோழர் சி ஜி தலைமையில்  புதிய சங்கம் துவக்கப்பட்டது. நிர்வாகம் சங்கத்தை அங்கீ கரிக்க மறுத்தாலும் 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற திரப்ட் சொசைட்டி, கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு கேன்டீன் யன்களுக்கு நடைபெற்ற 21 இயக்குநர்களுக்கான தேர்தலில்  சிஐடியு 20 இடங்களில் வெற்றி பெற்று தொழிலாளர்க ளின் அங்கீகாரத்தைப் பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம் கைக்கூலி சங்கங்களைக் கையில் வைத்துக் கொண்டு ஆலையை மூடியது. தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையை வழங்கவேண்டுமென சிஐடியு சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு தொகை பெற்றுக் கொடுக்கப்பட்டது. நவீன தாராளமயக் கொள்கை தீவிரமாக அமலாக்கப் பட்டுவரும்  காரணமாக தற்போது பல தொழில்கள் இல்லை. இருப்பினும் என்எல்சி,மின்சார வாரியம், அரசாங்க போக்குவரத்து, சிப்காட், கூட்டுறவு, மருந்து விற்பனை போன்ற அமைப்பு சார்ந்த துறைகளிலும் கட்டுமானம் ஆட்டோ  உள்ளிட்ட முறைசாரா பகுதிகளிலும் சிஐடியு தொழிற்சங்கம் வலுவாகச் செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் சிஐடியு சங்கத்தை மேலும் வலுவாக  உருவாக்கத் தோழர் சி.ஜி நூற்றாண்டில் சபதம் ஏற்போம்.



 

;