districts

விழுப்புரத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துக

மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

விழுப்புரம், மே 7- விழுப்புரத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணியன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் 2ஆவது அவை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் தேவையான ஆக்சிஜன் கையிருப்பு, தடுப்பூசி, உடனுக்குடன் பிசிஆர் பரிசோதனைகளை செய்தல், மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், தனிமைபடுத்துதல் முகாம்களை ஏற்படுத்தி வருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது, இருப்பினும், மாவட்டத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியிலிருந்து மே 3ஆம் தேதி வரை 13 நாட்களில் சுமார் 3,258 பேர் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

11 பேர் உயிரிழந்துள்ளனர், மாவட்டத்தில் நோய் தொற்றினால் தினசரி பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், தினசரி சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்து போவதும் மாவட்ட மக்களிடத்தில் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கவும், பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் கீழ்கண்ட ஆலொசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு பணிகளை ஒரு மக்கள் இயக்கமாக நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் அமைப்புகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பணியாற்றி கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பங்கேற்கும் ஆலொசனை கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். அதனடிப்படையில் அனைவரையும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு போல் மாவட்டத்தில் ஊராட்சி அளவிலும், நகரங்களில் வார்டு அளவிலும், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியனவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும், நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தவும் திட்டமிட வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும் கிருமிநாசினி மருந்துகளை தெளிப்பது, பிளிச்சிங் பவுடர் போடுவது, கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்வது, குடிநீர் தொட்டிகளை தூய்மைபடுத்துவது ஆகிய பணிகளை செய்திடவும், கோடைக்காலம் என்பதால் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடுன்றி கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பதோடு அதற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கு தேவையான நிதியை தடையில்லாமல் வழங்க   வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், நோய் பாதிக்கப்பட்ட பகுதியிலும் கபசுர குடிநீர் இலவசமாக தினசரி வழங்க வேண்டும். நோய்த் தொற்று உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறலாம் என்கிற வழிகாட்டுதலை கைவிட வேண்டும்.

இதனால், தனிமையான அறை, கழிப்பிட வசதி இல்லாதவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களால் நோய் மற்றவர்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. எனவே, நோய் தொற்றை கண்டறிந்தவுடன், அரசு தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். விழுப்புரம், விக்கிரவாண்டி கண்டாச்சிபுரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் ஆகிய தாலுக்கா மருத்துவமனைகளில் நோய் தொற்றை உடனுக்குடன் கண்டறியும் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டும். நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான “ரெம்டிசிவர் மருந்து” இலவசமாக கிடைத்திட தாலுக்கா மருத்துவமனைகளில் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,  நூறு நாள் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் சமூக இடைவெளியுடன் கூடிய வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஆணையின்படி 100 நாட்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். நூறுநாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கூலி பாக்கி இல்லாமல் உடனுக்குடன் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;