districts

img

தலித் மக்கள் அமரும் தடுப்பு கட்டை உடைப்பின் பின்னணியில் சாதிய வன்மம், காவல்துறை

சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன் குற்றச்சாட்டு

திருக்கோவிலூர், ஏப் 17- சாதி ஆதிக்க சக்திகள் மற்றும் காவல்துறை கூட்டு செயல்பாடே மாடாம்பூண்டியில் நடைபெற்ற தலித் மக்கள் மீதான தாக்குதல் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை தலைவர் ஜி.ஆனந்தன் குற்றம் சாட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தை சேர்ந்த மாடாம்பூண்டி கிராமத்தில் தலித் மக்கள் அமர்ந்து பேசும் கால்வாய் தடுப்புக் கட்டையை ஜேசிபி இயந்திரத்தை வைத்து சாதி ஆதிக்க வெறியர்கள் இடித்துத் தள்ளியதை கண்டித்தும், காவல்துறையினர் சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமையன்று (ஏப் 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்து அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் பேசியதாவது; மாடாம்பூண்டி கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பை சுற்றி பிற்படுத்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. உழைப்பாளிகளான இவர்களிடையே சாதி மோதலை உருவாக்கும் வகையில் பாமக ஆதரவாளரின் தூண்டுதலின்பேரில் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பாமக திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனது ஜேசிபி இயந்திரத்தை வைத்து பொது சொத்தான தடுப்பு கட்டை இடிக்கப்பட்டுள்ளது. ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி வந்த வெங்கடேசன் என்பவரும் பாமக ஆதரவாளர் ஆவார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் தலித் மக்கள் மீது தடியடி தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட தலித் இளைஞர்களை பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வேண்டுமென்றே வழக்கு பதிந்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஆனால் பொது சொத்தான தடுப்பு சுவரை இடித்த சாதி ஆதிக்க சக்தியினர் மீது பொது சொத்தை சேதப்படுத்திய பிரிவின்கீழ் வழக்கு பதியவில்லை. காவல் நிலையத்திலும் தலித் இளைஞர்களை அடித்து துவைத்த போலீசார் கலவரத்தை நடத்திய எதிர் தரப்பினருக்கு பிரியாணி வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லி உள்ளனர். மேலும் இப்பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களில் சிலர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதன் மூலம் அவர்களை சாதி பின்னலின் கீழ் கொண்டுவர காவல்துறை பாமகவிற்கு ஆதரவாக திட்டமிட்டு பணி புரிந்துள்ளது என்றார். மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை பேசும்போது “ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான ஆதிதிராவிடர் நலக்குழுவிற்கு தலைவரான கோட்டாட்சியர் மாதந்தோறும் இக்குழுவைக்கூட்டி ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். ஆனால் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதென்பது சாதி ஆதிக்க சக்தியினருக்கு துணைபோவதாக உள்ளது” என்றார்.

எனவே தலித் மக்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், சாதிக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டிய நபர்கள் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், உடந்தையாக இருந்த காவல்துறையினர்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட பிரிவினர் 28 பேர் மீதும், அதேபோல் இச்சம்பவத்தில் தொடர்பில்லாத மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மீதும் புனையப்பட்டுள்ள குற்றவியல் விசாரணை நடைமுறை சட்ட (107) வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட செயலாளர் எம்.எஸ்.கே.ஹரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் விழுப்புரம் எஸ்.வேல்மாறன், எம்.செந்தில், வட்ட செயலாளர்கள் எம்.முத்துவேல், ஆர்.ராஜவேல் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆர்.பூமாலை, மு.சிவகுமார், ஏ.சின்ராசு ஆகியோர்  உரையாற்றினர். பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;