districts

img

நீட் விலக்கு: மாணவர் சங்கத்தின் துண்டறிக்கை விநியோக இயக்கம்: பி.ஆர். நடராஜன் எம்.பி துவக்கி வைப்பு

நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு இந்திய மாணவர் சங்கம் நடத்தும் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் ஆதரவை கேட்டு மாணவர் சங்கத்தினர் கோவையில் ஞாயிறன்று துண்டறிக்கை விநியோக இயக்கத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 27 ஆம் தேதி நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்த உள்ளது. இதன்ஒருபகுதியாக நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதுகுறித்த தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் நடத்த உள்ளது. இப்போராட்டத்தின் அவசியம் குறித்து மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்திய மாணவர் சங்கத்தினர் துண்டறிக்கை விநியோக இயக்கத்தில் ஞாயிறன்று ஈடுபட்டனர்.

 கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இவ்வியக்கத்தின் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற இவ்வியக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் துவக்கி வைத்தார். முன்னதாக துண்டறிக்கை விநியோகம் செய்து பொதுமக்களிடம் பேசுகையில், நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களின், கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை சீர்குலைக்கிறது. தனியார் பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கான ரூபாய்களை மாணவர்களிடம் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கிறது.

 தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைத்து மாநில உரிமைகளை பறிக்கும் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் விரிவான போராட்டத்திற்கு திட்டமிடும் இந்திய மாணவர் சங்கத்தின் நீட்தேர்விற்கு எதிரான இந்த போராட்டம் வெற்றியடையும். மாணவர் சங்கத்தின் இயக்கத்திற்கு மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் ஆதரவை தர வேண்டும் என்றார்.

இவ்வியக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு நகரச் செயலாளர் என். ஜாகிர் உள்ளிட்ட இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

;