கோவை, அக்.24- பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த அரசு பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே திடீரென தீப் பிடித்து முழுமையாக எரிந்து சேதமானது. ஓட்டுநர் சாதூர்யமாக பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்ட தால், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து, உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வியாழனன்று காலை அரசு பேருந்து 30 பயணிகளுடன் வந்து கொண்டி ருந்தது. பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது பேருந்தின் முன் பகுதியில் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய நிலையில், பயணிகள் அனைவரையும் இறங்குமாறு நடத்துனர் அறிவுறுத்தினார். பயணிகள் அனைவரும் இறங்கிய பின்பு பேருந்து முழுவதும் தீப் பிடித்து எரிந்தது. சில நிமிடங்களில் தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் வந்த அவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.