districts

img

தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் விஜய் வசந்த் எம்.பி., ஒத்திவைப்பு தீர்மானம்

நாகர்கோவில். டிச.16- தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்வதை இந்தியா வந்துள்ள இலங்கை அதிபருடன் பேசி தீர்வு காண வேண்டும் எனவும், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோர வேண்டுமெனவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்மொழிந்தார். கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கி வருகிறது. மேலும் அவர்களை சிறைப்பிடித்து அவர்களது உடைமைகளையும் கைப்பற்றி வருகிறது. 2024 ஆம் ஆண்டு மட்டும் 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். இலங்கை அரசின் அத்துமீறல் அதிகரித்து வருவதற்கு இதுவே சான்று. 1974 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரண்டு அரசுகளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குழுக்கள் அமைத்து தீர்வு காணமுன் வர வேண்டும். அங்கு கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இதனை இலங்கை அதிபருக்கு இந்திய பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.