மீனவர் காலனியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அறந்தாங்கி, டிச.14 - புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், கட்டுமாவடி, மீமிசல் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மணமேல்குடியில் பெய்த கனமழையால் பொன்னகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக மீனவர் காலனி பகுதியில் மழைநீர் முழுமையாக வீடுகளுக்குள் புகுந் துள்ளது. இவற்றை விரைந்து அப்புறப்படுத்த வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஆவுடையார்கோவில் சுந்தரம் காலனி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். உடனே தண்ணீரை அப்புறப்படுத்தி அந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.